உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. உண்ணற்க கள்ளை

பிரடரிக்கு நிக்காலசு சாரிங்டன் என்பார் ஓர் இளைஞர்;

தொண்டர்; தொண்டர் சூழலர்; இங்கிலாந்து தேயத்தவர். ஏழை எளியவர் வாழ்பகுதியை அவர் உள்ளம் அடிக்கடி நாடும். அங்குள்ள தூய்மை இன்மையும் வறுமையும் அவரை வாட்டும்! தொண்டுள்ளம் கொண்டார்க்கு அவ்வாட்டுதல் ஒதுங்கச் செய்து விடுவதில்லை; மேலும் மேலும் அவ்விடத்து நாட்டத் தையே உண்டாக்கும் தானே!

சாரிங்டன் ஒரு நாள் சென்ற ஒதுக்குப்புற வறுமைப் பகுதி; அடைசலான குடிசைகள்; சாய்க்கடை வழியும் தெரு; அங்கொரு வாய்த் தகராறு.

கணவன் திட்டுகிறான்; வைகின்றான்; அடித்தும் தள்ளு கிறான்; யாரை?

அவன் கைப்பிடித்த மனைவியை!

கெஞ்சுகிறாள்; மன்றாடுகிறாள்; விழுகிறாள்; அழுகிறாள்! தொழுகிறாள்!

அவள் உடையைப் பற்றிக் கொண்டு பிள்ளைகள் மூவர் நால்வர் கதறுகின்றனர்; தாயை விடுக்க முடியாமலும், தந்தையைத் தடுக்க முடியாமலும் விம்மியழுகின்றனர்! கதறுகின்றனர்.

குடித்து விட்டு இக்கொடுமை செய்கிறான் கணவன் என்றும் குடும்ப நிலைக்கு மன்றாடுகிறாள் மனைவி என்றும் உணர்ந்தார் தடுத்து நின்றார் - சாரிங்டன்!

-

தடுக்கும் அவர் முனைப்பின் ஊடே, கண் ஆங்கிருந்த கடையின் பலகையால் இழுக்கப்பட்டது!

தலையைத் தொங்கப் போட்டார், நாணத்தால்! ஏனெனில் தம் தந்தையார் வைத்திருக்கும் மதுக்கடைகளுள் அக்கடையும் ஒன்று என்பதை அப்பலகை காட்டிற்று!