உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வையகம் தழுவிய வாழ்வியல்

135

"உடன் பிறந்தார்களே, உரைப்பதைக் கேளுங்கள் நானோ கிழவி; இங்கே ஆணென எவரும் இலர். ஏழைக் குழந்தைகளும் பெண்களுமே உளர். எங்களால் உங்களைத் தடுக்க முடியுமோ? நல்லுளம் உடையோர் நன்கொடையாலே நடப்பது இவ்விடுதி. உங்கள் செயலால் பலநாள் பட்டுணி கிடந்துளோம். உங்கள் வறுமையே இப்படிச் செய்யத் தூண்டி இருக்கலாம். எனினும் உங்கள் மேல் வருத்தமில்லை. உங்கள் குழந்தையர் பெண்டிர் பசியைத் தாங்காமல் இப்படிச் செய்கின்றீர்கள். அவர்கள் பட்டுணி தாங்காமல் செய்யும் நீங்கள் இவர்கள் பட்டுணி தாங்காமல் கிடக்கும் நிலையை எண்ணுங்கள்! இவர்களும் உங்கள் குழந்தைகள் உடன் பிறப்புகள் இல்லையா? கடவுள் ஒருவர் எல்லார் செயலையும் பார்த்துக் கொண்டே உள்ளார். மேலேனும் இவ்வேழையர் உணவை எடுத்துச் செல்லாமல் இருக்க மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.

இளகிய சொற்கள் திருடர் நெஞ்சக் கல்லையும் கரைத்தன!

"இனிமேல் திருட மாட்டோம்" என்றொரு குரல் எழுந்தது. விடிந்து பார்த்தார் பாக்கியத்தம்மையார். எடுத்து வைத்த பொருள்கள் எல்லாம் அப்படி அப்படியே இருந்தன!

அதற்குப் பின்னர் அத்திருடர்கள் அவ்விடுதியில் திருடவந்ததே இல்லை!

திருடர் ஆயினும் என்ன? திருந்தாப் பிறவியரா அவர்? திருத்தும் திறவோர்இருப்பின் திருந்தார் எவருமே இரார்! எவ்வகையாலும் திருந்தார் உளரேல் அவரே கயமை உருவர்! இத்தகு நிகழ்ச்சி ஒன்றனை வள்ளுவக் கிழவர் கண்டாரோ? திருந்துவோர் திருந்தார் தம்மை எண்ணி இருபாற்பட நின்றாரோ?

அதனால்,

"சொல்லப் பயன்படுவர் சான்றோர்; கரும்புபோல் கொல்லப் பயன்படும் கீழ்"

என்றாரோ?

(1078)

செய்தி: 1939 (செந். செல்: 17:177 கள்ளனைத் திருத்திய கன்னி; மறை.

திருநாவுக்கரசு)