உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16.

எவ்வளவு சின்னஞ்சிறு குழந்தை ஈது.

கைச்சாண் அளவு தான் உயரம்.

கையின் அளவு கனமும் இல்லை.

காலும் கையும் தலையும் உடலும்,

தூக்கி எடுக்கச் சிறிய பொம்மை!

இந்தக் குழந்தையைக் கண்ணாடிப் புட்டிக்குள்ளே

போட்டு வைக்கலாம்!

இப்படிப் பேசப் பிறந்த குழந்தை!

மெலிந்த குழந்தைக்கு, மெலிவிலா அறிவு.

எதனை எனினும் துருவித் துருவிப் பார்க்கும்.

எண்ணி எண்ணிப், புதிது புதிதாய்ச் சொல்லும்.

பள்ளிக் கல்வியில் பளிச்சிடு திறமை -

பள்ளி மாணவருள்ளேயே மெலிந்த உருவம்!

"இந்த உருவத்தினுள் இவ்வளவு புலமையா" எனப் பெற்றோர் வியந்தனர்; பிறரும் வியந்தனர்.

ஒருநாள் கனி மரத்தின் கீழே அமர்ந்திருந்தான்;

காம்பு விட்டுக் கனியொன்று வீழ்ந்தது.

கனி கீழே வீழ்தல் என்ன உலகம் காணாப் புதுமையா? அன்றுதான் விழுந்ததா? அவன் முன்தான் விழுந்ததா? என்றும் எங்கும் உள்ள நிகழ்ச்சியே எனினும்,

அன்று அவனுக்கொரு விந்தை ஆயிற்று!

"வீழ்ந்த கனி மேலே போகவில்லை; பக்கங்களிலும் போகவில்லை, கீழே வீழ்ந்தது ஏன்?” என எண்ணினான்.