உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

இளங்குமரனார் தமிழ்வளம்

-

39

எதிரிகள் இயலாதவர்களா? நயவழிகள் பயவழிகள் என்னென்ன உண்டோ அவ்வளவும் செய்து பார்த்தனர். பய வழிகள் வீரர்முன் மண்டியிட்டன; நயவழிகள் பண்புமலை முன் நாடியொடுங்கின! வஞ்ச வழிகளையே, தஞ்சமாகக் கொண்டு ஒடுக்க முன்வந்தனர் அயலார்!

சுதேசிக் கப்பலில் ஏறுவதும், சரக்கு ஏற்றுவதும் குற்றங்கள் ஆக்கப்பட்டன; கப்பற் கம்பெனிக்குப் பணம் தருவோரும், பணிபுரிவோரும் பழிவாங்கப்பட்டனர்; ஆள்வோர் நினைத்தால் காரணங்களா கிடைக்கா? உறுப்பினர்களுக்கே இவ்வளவு இக்கட்டு என்றால், தலைவருக்கு? அந்தோ! நாட்டுப் பற்றுக் கொண்டு செய்யும் செயல்களுக்குப் பரிசும் பதவியும் தந்து பாராட்ட வேண்டிய அரசு பழிப்பட்டம் சூட்டியது; குற்றக் கூண்டிலே நிறுத்தியது. "துரோகி" என்று பட்டயம் தீட்டித் தந்து சிறைக்குள் தள்ளியது.

உள்ளேயாவது ஓய்ந்திருக்க விட்டதா?கல்லுடைக்க வைத்தது. செக்கிழுக்கச் செய்தது. எல்லாவற்றையும் இன்பமாகக் கருதினார் வ.உ.சி. தாம் படும் துன்பங்கள் அனைத்தும் உரிமைக் கோயிலுக்குச் செல்லும் பாதைகளில் அமைந்த 'மைல்'கற்களே' என்று மகிழ்ந்தார்! உரிமைக் கொடி சிறிது சிறிது ஆக உயர்த்தப் படுவதாக உவந்தார். அது வீணாகி விட்டதா? இன்று, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்" என்று பள்ளுப் பாடி விட்டோம்! 'விடுதலை விடுதலை விடுதலை" என்று முழங்கிவிட்டோம்.

அன்று வ.உ.சி. இலக்க உரூபாக்களைப் பொருட்டாய் எண்ணியிருந்தால் -தூ என்று காறித் துப்பாமல் இருந்தால் - அவர் வாழ் நாளெல்லாம் பொன்னாலும் பொருளாலும் பொலிந்திருப்பார்! ஆனால் என்றென்றும் "அழியாப் புகழ்" அவரை உரிமையாக்கிக் கொண்டிருக்குமா?

44

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை

அன்றே ஒழிய விடல்”

(நன்மையே தந்தாலும், நடுவு நிலைமை கடந்து உண்டாகும் செல்வத்தை அப்பொழுதே ஒழித்து விடுக) என்பது அன்றோ தமிழ் மறை.