உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214

இளங்குமரனார் தமிழ்வளம்

-

39

உணர்வற்றோரால் எப்படிப் பழிக்கப்பட்டிருக்கும் என்பது வெளிப்படை.

விழிப்புற்ற தொண்டர்களாலும் தொண்டு நிறுவனங் களாலும் உடற்குறை பழிப்புக்கு உரியதன்று என்று பரப்பப் படுகின்றது. உடற்குறையர்க்குக் களைகண் இல்லங்களும் உருவாக்கப்படுகின்றன. அவரவர்க்குத் தக்க கல்வியும் தொழிற் பயிற்சியும் வேலை வாய்ப்பும் வழங்கப்படுகின்றன. அவ்வுடற் குறையை பயன்படுத்திக் கொண்டு இரப்பைத் தொழிலாகவே உடையவரும் பெருக்கமாகவே இருக்கவும் செய்கின்றனர். உடற்குறை இல்லாதவரையும் வெற்றி கொள்ளத்தக்க விழுமிய முயற்சியாளரும் கண்கூடாகவே இருக்கின்றனர். அவர்களுக்கு, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே குரல்கொடுத்து மெய்யுரைத்து மேன்மைப்படுத்தியவர் திருவள்ளுவர்.

“பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து ஆள்வினை இன்மை பழி"

என்பது அது.

(618)

உறுப்புக் குறை எவர்க்கும் பழியுடையது ஆகாது; உறுப்புகள் செவ்வையாக அமைந்திருந்தாலும் அமையாதிருந்தாலும் அறிய வேண்டுவனவற்றையெல்லாம் அறிந்து செய்யத்தக்க முயற்சி களெல்லாம் செய்யாதிருக்கும் பிறப்பே பழிப்பிறப்பு. குறையிலாப் பிறப்பாவது நிறைமுயற்சிப் பிறப்பு என நம்பிக்கை ஊட்டுகிறார். எத்தனை எத்தனை ஆயிரவர் உள்ளங்களைக் கறையானாய் அரிவாளாய் அரிக்கும் சிக்கலை

எளிமையாய் அறுக்கிறாரே வள்ளுவர்!

இரட்டையரையோ, அந்தகக் கவிவீரரையோ, மாம்பழக் கவிச் சிங்கரையோ, ஓமரையோ, மில்தனாரையோ, கெலன் கெல்லரையோ, இராமையனாரையோ, ஐயூர் முடவனாரை யோ, பண்டித மணியையோ, மயூரி சுதாசந்திரனையோ இன்ன முயற்சியாளர் பிறரையோ எண்ணுவார் பொறியின்மை யார்க்கும் பழியன்று என்பதை உணர்வார்.

மூன்றாண்டுகளில் உறுப்புக்குறையில்லார் பெறும் தொழிற் பயிற்சியை ஒன்றரை ஆண்டுகளில் மூங்கையர்க்கு (ஊமையர்க்கு)த் தந்து பேசுவார் பேச்சை ஒடுக்கினாரே தொழில்வல்ல தோன்றல் கோ. துரைசாமியார் (G.D. Naidu)

உடற்குறை பிறவிச்சிக்கல் அன்று; வினைச்சிக்கலும் அன்று