உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் சிக்கல்களும் வள்ளுவத் தீர்வுகளும்

245

"எங்களை விட்டு எங்கள் பெற்றோர் வேறிடம் போய் விட்டனர் என்றால் எங்கள் மானம் மதிப்பு என்ன ஆகும்? ஊர் உலகம் எங்களை எப்படியெல்லாம் பேசும்?" என்று தாங்கவும் முடியாமல் தடுக்கவும் முடியாமல் தவிக்கின்றனர் மக்கள்.

இயல்புடைய மூவர்

இவற்றுக்கெல்லாம் தீர்வு வழங்குவது போல் இல்வாழ்க்கை முதற் குறளை அமைத்துளார் வள்ளுவர். அது,

“இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை”

என்பது.

இப்பாடலில் உள்ள இயல்புடைய மூவர் என்பவர் தாய் தந்தை மனைவி என்பார். அவர்க்கு நிலைபெற்ற துணையாக இருக்க வேண்டியவன் இல்வாழ்வான் ஆகிய கணவன். பொறுப்புடன் இருந்து போற்றிக் காத்த தன் பெற்றோர் களையும், தன்னோடு உடனாகிக் குடும்பத் தலைவியாய் வாய்த்த துணையையும் போற்றிக் காத்தல் கடனாகக் கொண்டால் மேற்கண்ட சிக்கல் எழும்புதற்கு வாய்ப்பே இல்லையே!

"தம்பொருள் என்ப தம்மக்கள்” எனத் தம்மைப் போற்றிய வர்கள் தம் பெற்றோர்.

'அமிழ்தினும் ஆற்ற இனிதே தம் மக்கள் சிறு கையளாவிய உணவு' என உவப்புற்றவர் அப் பெற்றோர்.

'குழலினும் யாழினும் இனியது தம்மக்கள் மழலைச் சொல்' என மகிழ்ந்தவர் அப் பெற்றோர்.

மக்கள் கையும் மெய்யும் பட்டுத் தழுவலில் கழிபேருவகை யுற்றவரும் அப் பெற்றோர்.

சான்றோர் அவையில் முந்தியிருக்கத் தக்க கல்வியும் சால்பும் தந்த பெருங் கொடையரும் அப்பெற்றோர்.

தம்மைப் பற்றிய நற்சொல் ஒன்று சொல்லப்படுமானால் தம்மினும் மேலாக மகிழ்ந்த பெருந்தக்காரும் அப்பெற்றோர்.

அவர் இல்லாக் கால், அவர் அரவணைப்பு அமையாக்கால் தாம் பெற்றிருக்கும் இற்றை நிலைகளை யெல்லாம் எய்தியிருக்க இயலுமா? காலத்தால் அவர்கள் செய்த உதவிகளை ஞாலத்தின் மாணப் பெரியனவே அல்லவோ!