உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254

இளங்குமரனார் தமிழ்வளம் - 39

எளிமையும் அழகும்

‘துணிமணி' என்பதோர் இணைச் சொல், 'ஆடை அணிகலம்' என்னம் பொருளது இச் சொல்.

பட்டிலும் பலவகை அணிகளிலும் நம்மவர் கொண்டுள்ள பற்றுமையும் பகட்டும் எல்லை யற்றவை.

"தலையில் களிமண் இருந்தாலும், கழுத்தில் தங்கம் இருந்தால் போதும்" என்னும் போலிமையும் பொதுப் பொருளாகிவிட்டது.

விலை யுயர்ந்த பொருள்களை விரும்புவதன் கேடு உறுப்புக் குறையும்,உயிரழிவும் ஆதல் அறிந்தும் அவற்றை விட்டொழிக்கும் வீறு, கற்றுச் சிறந்த மகளிர்க்கும் உண்டாகவில்லை!

ஆடை அணிகலப் பகட்டில் இருந்து அடையும் விடுதலையே உண்மை விடுதலை என்பதை மாதர் நல மன்றங்கள் வெட்ட வெளிச்சமாய்ச் சுட்டிக் காட்டி வலியுறுத்த வேண்டும்.

வள்ளுவப் பெருமகனார் அன்றே குறிப்பாகவும் வெளிப்படவும் இக் குறைபாடுகளைச் சுட்டிக் காட்டினார். க் அதனை மாதர் உலகம் கண்டு கொள்ளவில்லை; மற்றையோரும் தெரிந்து கொள்ளவில்லை. அவர்,

"பணிவுடைமையும் இனியவை கூறலும் அணிகலன்கள்”

என்றார் (95).

“மங்கலமனையறத்திற்கு மக்களே நன்கலம் (நல்லணிகலம்)"

என்றார் (60).

“காலந்தாழ்த்தல் மறத்தல் சோம்பல் நெட்டுறக்கம் என்பவை கெட்டுப்போகின்றவர் அணியும் அணிகலங்கள்"

என்றார் (605)

எவரும் அணிகலம் அணியாத உறுப்பாம் கண்ணுக்கு ஓர் அணிகலம் அணிதல் வேண்டும்; அது கண்ணோட்டம் (அருள்) என்னும் அணிகலம் என்றார். (575)

தலைவியின் அணிகலங்களைக் காணும் தலைவன், "பெண்மானின் அழகிய மெல்லிய நோக்கும், நாணமும் இயற்கை அணிகலங்களாகக் கொண்ட இவளுக்கு, மற்றும் அயலான செயற்கை அணிகலங்களை அணிந்து விட்டது எதற்காகவோ?