உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் வழிநடை

37

கடுவன் என்பவன் அவன். கடுவன் மூக்கன் சேவலை அடிக்கக் கூடிய அளவுக்கு வித விதச் சேவல்களைக் கொண்டு வந்தான். இனி மூக்கன் என்ன செய்வது?

மூக்கன் கடுவனை வெற்றி கொள்ள என்னென்ன வழிகள் உண்டோ அவ்வளவும் செய்தான். சேவலை ஊக்கப்படுத்தி ஏவினான்.தன்னையும் ஊக்கப்படுத்த விரும்பிச் சீழ்க்கை அடித்தான்; புகை பிடித்தான். ஏதாவது குடித்தால் தான் 'ஊக்கம்' ஏற்படும் போல் அவனுக்கு இருந்தது. அதற்காகத்தான் மணிமுத்தைப் புட்டியுடன் கள்ளுக் கடைக்கு அனுப்பி வைத்தான்.

மணிமுத்து புட்டியுடன் விரைந்து ஓடி வந்தான். கொஞ்சம் பொறுக்கக் கூடாதா?"டே ஓடி வா; போனது எந்நேரம்! வருவது எந்நேரம்! வா இங்கே!" என்று கத்தினான். "இனி என்ன கிடைக்குமோ? என்ற பயத்தில் ஓடிவந்த மணிமுத்து கல் காலை இடற,கள்ளிருந்த புட்டியையும் போட்டு விழுந்தான். புட்டியும் உடைந்தது. கள்ளும் கொட்டித் தொலைந்தது. சேவற்போர்த் தோல்வியல் கடுப்புக் கொண்டிருந்த மூக்கனை இது கிளறி விட்டது. கோபம் கொந்தளித்துக் கிளம்பிற்று. இடுப்பில் இருந்த கத்தியினை எடுத்துக் கொண்டு மணிமுத்தினை நோக்கி ஓடினான். கூட்டமெல்லாம் சேவற்போரை விட்டுத் திகைத்தது. மூக்கனைத் தடுக்க எவருக்குத் துணிவுண்டு?

மணிமுத்து மருண்டோடும் மான்போல ஓடினான். வேங்கைப் புலிபோல வெருட்டிச் சென்றான் மூக்கன். ஓடும் விரைவில் எத்தனையோ இடங்களில் இடறியும் எழுந்தும் தாவியும் சென்றான் மணிமுத்து. ஆனால் மூக்கன் ஓரிடத்தில் உருண்டு விட்டான். உருண்டாலும் தொடர்ந்து செல்வதை விட்டானா? மணிமுத்துக்கு என்ன நேருமோ என்று அவனைப் பெற்றெடுத்த காத்தாயியும் ஓடிவந்தாள்."ஐயோ ஐயோ! வேண்டாம் ; வேண்டாம்' என்னும் அவள் குரல் மூக்கன் செவியில் படவா செய்யும்?

மணிமுத்து இளைஞன் அல்லவா! சிட்டுப் போலப் பறந்து விட்டான். முடுக்கு, சந்து, பொந்து ஆகிய இடங்களிலெல்லாம் ஓடினான். 'பயல் தப்பி விடுவான்.' என்னும் எண்ணம் தாய்க்கு ஏற்பட்டாலும் பின் தொடர்ந்து ஓடினாள். மணிமுத்து ஒரு வீட்டில் நுழைந்தான். அவ்வீடு மெய்யப்பனுடையது என்பதைக் காத்தாயி அறிவாள். ஆனால் மணிமுத்து, இன்னார் வீடு என்பதையும், வீட்டுக்காரன் குணம் இன்னது என்பதையும் அறியமாட்டானே!