உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

இளங்குமரனார் தமிழ்வளம் - 39

"டே பையா! என்னடா ஓட்டம்? இங்கென்ன?" என்றான் மெய்யப்பன். நடுக்கத்துடன் நிலைமையைச் சொன்னான் மணிமுத்து. "டே, மெய்யப்பன் என்ற என் பெயரை நீ அறிய மாட்டாயா? என்ன ஆனாலும் நான் பொய் சொல்லேன். உன் அப்பன் வந்து கேட்டடால், நீ இங்கே மறைந்து இருக்கும் உண்மையைச் சொல்லி விடுவேன். வேண்டுமானால் நான் அவனைத் தேடிப் போய்ச் சொல்ல மாட்டேன், அவ்வளவுதான் உனக்காக நான் செய்ய முடியும்! அப்பப்பா! உண்மையை மறைக்க என் கால் தடம்பட்டவனுக்கும் மனம் வராது; எப்படியோ உன் விருப்பம்போல் பார்த்துக்கொள்” என்றான்.

மணிமுத்துக்கு, மெய்யப்பன் சொல்லைத் தாங்க முடிய வில்லை. ‘சண்டாளன்' 'துரோகி' 'விளாங்காதவன்' என்று திட்டிக் கொண்டே ஓடினான். காத்தாயி, மணிமுத்து மெய்யப்பன் வீட்டிலிருந்து ஓடுவதைக் கண்டாள். இப்படித்தான் நடந்திருக்கும் என்று உணர்ந்து கொண்டாள்.மெய்யப்பன் மனிதன்தானா? அவன் மெய்யும் ஒரு மெய்யா? கொலைப்பாதகன் என்று ஏசிக்கொண்டு அவன் வீட்டிற்குப் பின்புறத்தில் நின்றாள். மணிமுத்து அடுத்த வீட்டுக்குள் ஒளிந்து கொண்டது அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. "நல்லவேளை, மணிமுத்து அடுத்த வீட்டில் ஒளிந்ததை மெய்யப்பன் பார்க்கவில்லை. பார்த்துத் தொலைத்தால் அதனையும் சொன்னாலும் சொல்லுவான். அவ்வளவு மெய்மைப் பித்தன் அவன் என்று காத்தாயி இன்பமடைந்தாள்.

மூக்கன் ஓடி வந்தான். மெய்யப்பனிடம் கேட்டான்: "என் பயல் வந்தானா?"

"ஆ ஆ! உன் பயலா? இங்கு வந்து ஒளிந்தான். நான் உண்மையைச் சொல்லிவிடுவேன் என்றேன். இந்தப் பக்கமாக ஓடினான்.ஒரு வேளை அடுத்த வீட்டில் ஒளிந்திருந்தாலும் ஒளிந்திருப்பான்" என்றான் மெய்யப்பன்.

'அடுத்த வீட்டில் ஒளிந்திருந்தாலும் இருப்பான்' என்னும் ஒலி காத்தாயிக்கும் கேட்டது. அடுத்த வீட்டுக்காரனுக்கும், மணிமுத்துக்கும் கேட்டது. "ஐயோ! இந்தச் சனியன் இங்கிருப் பதையும் காட்டிக் கொடுத்துவிடுவான் போல் இருக்கிறதே" என்று ஒரே வேளையில் அனைவரும் வருந்தினர், அதற்குள் மூக்கனும் வீட்டுக்குள் புகுந்து விட்டான்.