உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் வழிநடை

41

மூக்கன் புரண்டு புரண்டு படுத்தான். காத்தாயி அவனிடம் ஒன்றும் கேட்கவில்லை. ஏதாவது கேட்பாள் என்று பலமுறை நினைத்தான் மூக்கன். காத்தாயிக்குத் தான் நடந்ததெல்லாம் தெரியுமே! அவனாகச் சொல்லட்டுமே என்று வாய் திறக்க வில்லை. நெடுநேரம் கழித்து மூக்கன் பேசினான்.

"காத்தாயி, பயல் இன்னும் வரவில்லையே! எங்கே போனானோ? அறிவில்லாமல் வெருட்டிச் சென்றேன்" என்று தலையில் அடித்துக் கொண்டான்.

"இப்படி வெறிபிடித்த தகப்பனுக்குப் பிள்ளை என்று இருப்பதைப் பார்க்கிலும் ஆற்றிலோ குளத்திலோ விழுந்து செத்திருந்தாலும் நல்லது தான். அந்தச் சின்னஞ் சிறியது செய்த காரியத்திற்கு வெட்டவும் குத்தவும் போவது தான் பெரியவன் செய்யும் காரியமா? என்ன கேடும் கெடுகிறான்" என்று மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு பேசினாள் காத்தாயி.

"காத்தாயி, நீதானா இப்படிச் சொல்கிறாய்?

"நீ வெருட்டிக்கொண்டு போன நேரத்திலே பயல் அகப் பட்டிருந்தால் விட்டு வைத்திருப்பாயா? நீ குத்திக் கொல்வதற்குப் பதில் ஆறோ குளமோ கொன்றிருந்தால் புண்ணியம் அல்லவா? கொஞ்ச நேரம் வரவில்லை என்று இந்தத் துடி துடிக்கிறாயே, அவன் உன் கத்தியால் குத்தப்பட்டு இங்கு சவமாகக் கிடந்தால் எப்படி இருக்கும் உனக்கு? ஒரு காலம் இல்லையானாலும் ஒரு காலமாவது அறிவு வேண்டாமா?" என்றாள்.

மூக்கன் கைகளால் தலையில் இடித்துக் கொண்டு கதறினான். "காத்தாயி, இப்பொழுது அறிவு வருகின்றது; வந்து என்ன செய்வது? பயலைக் காணோமே! நீயாவது தேடிப்பார்த்து வாயேன்" என்று கசிந்து அழுதான். கோபத்தின் விளைவு எப்படி ஆகும் என்பதை நினைத்து ஏங்கினான். இதற்கு முன் அவன் கோபத்தால் ஏற்பட்ட பொருள் கேடு, சிறை வாழ்வு, சீரழிவு ஆகிய எல்லாமும் கண்முன் நின்றன. தலையைச் சுவரில் மோதிக் கொண்டு விம்மினான். ஏறிச் சென்ற உணர்ச்சி இறங்கும் போது இப்படித்தான் கூத்து நடக்கின்றது! உணர்ச்சி ஏறும் போதுதானே அறிவு வேண்டும்? இறங்கியபின் இருந்தாலென்ன இல்லை யானால் தான் என்ன?