உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

இளங்குமரனார் தமிழ்வளம்-39

சொல்லிக் கொண்டு நடந்தான். அவன் சொற்கள் காத்தாயி காதிலும் விழுந்தன. அவளால் தாங்க முடியவில்லை! அரிச்சந்திரன் போல நடிக்கும் அவன் நடிப்பை நினைத்து ஆவேசம் கொண்டாள். அவள் மகனைப் 'பொய் சொல்ல மாட்டேன்' என்று வெருட்டிவிட்டான் அல்லவா!

"மெய்யப்பா! வெளியே வா; ஊரை ஏமாற்றுவது எத்தனை நாள்களுக்கு?" என்னும் வாழ்த்துரையுடன் உள்ளே வந்தாள் காத்தாயி. மெய்யப்பன் “துரை, கணக்கப்பிள்ளை இருக்கிறாரா?" என்று மெதுவாக மகனிடம் கேட்டான். "அவர் போய் விட்டார்" என்று சொல்லிய சொல்லை அடக்கிக் கொண்டு "கணக்கப் பிள்ளை போய் விட்டார்; ஆனால் காத்தாயி போகவில்லை. வெளியே வா; இதுவும் ஒரு பிழைப்பா? நீ கெட்ட கேட்டுக்கு மெய்யப்பன் எனும் பெயர் ஒரு கேடா ஒருவனை ஒருவன் குத்திக் கொல்ல வரும்போது, உயிரைக் காப்பாற்றுவதற்காகக் கூடப் பொய் சொல்ல மாட்டேன் என்ற வாய், கடன்காரனைக் கண்டவுடன் ஒளிந்து கொண்டு பொய் சொல்லலாமா? சோறுண்ட வாய்தானா இது? இரு; இந்தச் செய்தியைக் கணக்கப் பிள்ளைக்கும் ஊருக்கும் பரப்புகிறேன் பார். உன் ஒழுங்கு புலப்பட வேண்டாம்?" என்று துடிப்புடன் பேசினாள்.

மெய்யப்பன் வெட்கிப் போய், "காத்தாயி இந்த ஒரு வேளைக்கும் காப்பாற்று. நான் மெய்யன் தான். என் போதாக் காலம் இப்படிப் பொருள் முடை ஏற்பட்டு விட்டது. என்ன செய்வது!' என்றான். "பொருள் முடை உனக்குப் போதாக் காலம்! உயிரழிவு எங்கள் போதாக் காலம். எது பெரிது? உனக்காக -உன் கடன் தொல்லைக்காக - நீ பொய் சொல்லலாம். மற்றவர்கள் நன்மைக்காகப் பொய்யே சொல்ல மாட்டாய். இல்லையா? நீ உண்மையான மெய்யப்பன் என்றால் இந்தச் சிறுவனைக் காப்பாற்றுவதற்காகப் பொய் சொல்லி, கடன் காரனிடம் பொய் சொல்லாமல் இருந்திருக்க வேண்டும்; நீ தான் தன்னல மெய்யப்பன் ஆயிற்றே! அய்யோ, உன்னிடம் மெய்கிடந்து படும்பாடு உனக்குத்தான் வெளிச்சம்" என்றாள். அழாக் குறையுடன் நின்றான் மெய்யப்பன். காத்தாயி வெளியேறினாள்.

இவனைத் தண்டோராப் போட்டுத் திரியத் தலைவிதியா? போய்த் தொலைகிறான்; என்னைக்காவது ஒரு நாள் உணர்வான்' என்று அமைதியாக வீட்டுக்குப் போனாள் காத்தாயி. வழியில் கணக்கனைக் கண்டாள். பேசிக் கொண்டே வீட்டுக்குப் போனாள்.