உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் வழிநடை

43

வேண்டியிராது' என்றாள். அதற்குள் நீங்கள் பணத்துடன் வந்து விட்டீர்கள்; உங்கள் பையன் நான் வந்ததைச் சொன்னானா? என்று கேட்டான். உன்னை எப்படி வாழ்த்துவது என்று எனக்குத் தெரியவில்லை. நீ அவனிடம் சொல்லியது பொய்தான். இருந்தாலும் அப்பொய்யால் கணக்கப் பிள்ளையும் முதலாளியும் எவ்வளவு மதித்தார்கள் என்பதை அறிந்து கொண்டேன். எனக்குள் இவ்வளவு 'நேர்மை' தோன்றி விட்டது என்பதை எப்படிச் சொல்வது? நல்ல உள்ளத்துடன் பிறர் நன்மை ஒன்றே எண்ணிச் சொல்லும் பொய் எவ்வளவு பயன் தருகிறது என்பதை அறிந்து கொண்டேன் என்றான்.

காத்தாயி புன்முறுவலுடன் சொன்னாள். "உங்களைத் தூற்றுவதால் எனக்குக் கிடைப்பது என்ன? தூற்றிவிட்டால் அத்தூற்றுதல் மறைய எவ்வளவு காலம் ஆகும்? ஒருவன் வாழ்வில் எக்காரணம் கொண்டும் பொய் சொல்லக்கூடாது. கூடவே கூடாது. சொல்லக் கூடாத பொய்யைக் கூடப் பிறருக்குப் பெருநலம் வாய்க்குமானால் சொல்லலாம். தன் நலம் நாடிச் சொல்வதாக இருந்தால் எச்சிறு பொய்யையும் மன்னிக்கவே கூடாது.

"ஆம். காத்தாயி சொல்வது பெரிய உண்மை. உயர்ந்த அறமுங்கூட! அறத்தினை அறுதியிட்டு அரிய நூல் செய்த திருவள்ளுவரும் இதனைக் குறிப்பிட்டுள்ளார் :

“பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கு மெனின்”

குற்றமற்ற நன்மையைப் பிறருக்குத் தருமானால் பொய் சொல்லுவதும் மெய்மைக்கு ஒப்பாகும்.

“பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று"

என்று கூறிய திருவள்ளுவரே இப்படிக் கூறினார் என்றால் காரணத்தோடு தானே இருக்க வேண்டும்" என்றான் சென்னிமலை.

“உண்மை உண்மை! நான் சொல்லிய மெய், பொய்யாயிற்று! நீ சொல்லிய பொய், மெய்யாயிற்று' என்றான் மெய்யப்பன். "மெய்யப்பா, உன் பேச்சு மெய்யப்பா!" என்றான் மூக்கன். வீடு மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தது.