உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்திலக்கணச் சுருக்கம்

தமிழ் இலக்கணம், எழுத்து சொல் பொருள் எனத் தொல்காப்பியத்தில் நடையிட்டது.

எழுத்தும் சொல்லும் அந்நிலையிலே நின்றன.

பொருள் முக்கூறுபடுவன ஆயிற்று

தொல்காப்பியர் கூறும் அகத்திணை இயல், களவியல், கற்பியல், பொருளியல் என்பவை இறையனார் களவியல், நம்பியகப்பொருள், மாறன் அகப்பொருள் என அக நூல்கள்

ஆயின.

புறத்திணை இயல் அகத்திணை நூல்கள் போல் விரிவுறாமல் புறப்பொருள் வெண்பா மாலை என்று அமைந்தது. அதன் பின்னர்ப் புறப் பாடல்களைத் திரட்டிய புறத்திரட்டு என்று ஒரு தொகை நூல் உருவாகியது. ஐந்திலக்கணங்களையும் கூறும் நூல்களில் ஓரளவால் சொல்லப்பட்டு அமைந்து நின்றது.

யாப்பு நூல், காக்கை பாடினியம் சிறு காக்கைபாடினியம் அவிநயம் நற்றத்தம் எனப் பலப்பல நூல்களாய்க் கிளர்ந்தன.

எனினும் யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை என்பவை தோன்றிய பின் - அவற்றுக்கு அரிய பெரிய உரை விளக்கம் வாய்த்த பின் - பழைய யாப்பு நூல்களையெல்லாம் அவ்வுரைகளின் வழியாக அறியுமாறு அமைந்தன. தொல்காப்பியச் செய்யுளியல் கொண்டு கிளர்ந்தனவே யாப்பு நூல்களாம்.

இனித் தொல்காப்பிய உவமை இயல் கொண்டு கிளர்ந்தன தண்டியலங்காரம், மாறனலங்காரம் என்பவை. விரிய விரிய அணிகளைப் பெருக்கின; அதனை ஒட்டி வடமொழி வழியே அணி இலக்கணப் பெருக்கம் ஏற்பட்டு, உவமை என்னும் தாயணியின் இயற்கை எழில் சிதையலாயிற்று. சொல்லணி என்னும் நயமிக்க அணி, மொழி நலனுக்கு எத்தகு கேடு செய்யமுடியுமோ அவ்வளவும் செய்ய அணி நூல்கள் இடம்

தந்தன.