உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகப்பொருள்

179

மிகுந்தவதனால் மிகுந்த நினைவோடு கூறுதலும், தோழி தலைவிக்குத் துன்பம் நீங்கும்படி கூறுதலும், தலைவன் செலவு மீண்டமை தலைவிக்குக் கூறுதலும், மீண்டு வந்த தலைவனிடம் தாம்பட்ட பிரிவுத்துன்பத்தைக் கூறுதலும், அதற்குத் தலைவன் நீவிர் எவ்வண்ணம் ஆற்றியிருந்தீர் எனவினாதலும், தலைவியை ஆற்றுவித்திருந்த அருமையைத் தோழி தலைவனுக்குக் கூறுதலு மாகிய பன்னிரண்டும் ஒருவழித் தணத்தலின் விரிகளாகும். ஓதற்பிரிவு :

கல்விகற்பதற்காகப் பிரியும் பிரிவு ஓதற்பிரிவாகும். இ பிரிவு மூன்றியாண்டு காலவெல்லையினை உடையது. இப்பிரிவின் கண்சென்ற தலைமகன் ஓதுதலைவிட்டு வருதற்கு விரும்புதலும், தலைமகளை நினைத்துப் புலம்புதலும் கூடா. கண்டோர் இரக்கம் :

தலைவனுடன் உடன்போக்குச் சென்ற தலைவியின் தோழி மார்களும் தாயும் வருந்துதல் கண்டோர் இரங்கிக் கூறுதல். கரணம் தோன்றக் காரணம் :

மணமக்களிடையே பொய் கூறுதலும், குற்றப்பட நடத்தலும் தோன்றிய பின்னர் தமிழகச் சான்றோர் திருமணத்திற்குரிய சடங்குகளை வரையறை செய்தனர். அஃதாவது, மகளிர் அழகில் மயங்கி அவரைப் பன்முறையில் சிறப்பித்துக் கூறி அவர்கள் காதலைப் பெற்றுப் புணர்ந்த பின்பு அவரை மறந்து வேறு பெண்களை நாடும் ஆடவரும், “கூந்தல் நரைப்பினும் கொங்கை தளரினும் உன்னைக் கைவிடேன்” என்று உறுதி மொழி கூறி விட்டுப் பின்னர் கைவிடும் ஆடவரும் தோன்றிய பின்னர்த் தமிழகச் சான்றோர் திருமணத்திற்குரிய சடங்குகளை வகுத்தனர். கருப்பொருளின் வகை

தெய்வம், மக்கள், புள், விலங்கு, ஊர், நீர், பூ, மரம், உணவு, பறை, யாழ், பண், தொழில் என்ற பதினான்கும் ஐந்திணைக்கும் உரிய கருப்பொருள்களின் வகைகளாகும்.