உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொச்சகக் கலிப்பா

யாப்பு

385

ஒரு தரவு வந்தும், இரண்டு தரவு வந்தும், தாழிசை சில வந்தும், தாழிசை பல வந்தும், தரவு, தாழிசை, அராகம், அம்போ தரங்கம், தனிச் சொல், சுரிதகம் என்னும் ஆறுறுப்புந்தம்முண் மயங்கியும், வெண்பாவினோடும், ஆசிரியத்தினோடும் மயங்கியும் வருவனவெல்லாங் கொச்சகக் கலிப்பாவாகும். இவற்றுள் ஒரு தரவு வந்தால் தரவுக் கொச்சகக் கலிப்பா என்றும், தரவு இரண்டாய் வந்தால் தரவிணைக் கொச்சகக் கலிப்பா என்றும், சில தாழிசை வந்தால் சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா என்றும், பல தாழிசை வந்தால் பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா என்றும், தம்முண் மயங்கியும் பிறவற்றினோடு மயங்கியும் வருவனவெல்லாம் மயங்கிசைக் கொச்சக்கலிப்பா என்றும் வழங்கப்படும். இக்கொச்சகக் கலிப்பாக்களில், துள்ளலில்லாத வேற்றோசையுடைய அடிகளும் வரக்கூடும். கலிப்பாவிற்குரியன வல்ல என்று விலக்கப்பெற்ற, தேமா, புளிமா, கருவிளங்கனி, கூவிளங்கனி என்னும் நான்கு வகைச்சீர்களும் கொச்சகக் கலியினுள் வரக்கூடும். இப்பாவில் நெடிலடியும் வரக்கூடும். ஒத்தாழிசை வெண்கலிப்பாக்களுக்கு ஒவ்வாது நடப்பன வெல்லாம் கொச்சகக் கலிப்பாவினுள் அடங்கும்.

கோவை

ருவகையாகிய முதற்பொருளும், பதினான்கு வகை யாகிய கருப்பொருளும், பத்துவகையாகிய உரிப் பொருளும் பெற்றுக் கைக்கிளை முதலுற்ற அன்புடைக் காமப் பகுதியவாம் களவொழுக்கமும், கற்பொழுக்கமுங் கூறலே யெல்லையாகக் கொண்டு கட்டளைக் கலித்துறை நானூற்றால் திணை முதலாகத் துறையீறாகக் கூறப்பட்ட பன்னிரண்டகப்பாட்டுறுப்பும் தோன்றப் பாடப் பெறுவது கோவையாகும்.

ப்

சதகம்

அகப்பொருள் அல்லது புறப்பொருள் ஏதேனும் ஒன்றன் மீது நூறு பாடல்கள் பாடுவது சதகமாகும்.

சாதகக் கவி

ஓரைநிலையும், திதிநிலையும், யோகநிலையும், நாண் மீன் நிலையும், கிழமை நிலையும், கரணநிலையும், கோள்நிலையும் ஆகிய ஏழுறுப்புகளின் நிலைகளையும் காலக்கணித நூலால் நன்குணர்ந்து அவைகளின் பலனையமைத்து அவைகளால் தலைமகனுக்கு நிகழ்வன கூறுதல் சாதகக் கவி என்னும் பெயர் பெறும்.