உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. எல்லாப் பொருளும் இதன்பால் உள

“எல்லாப் பொருளும் இதன்பாலுள" என்பதுடன், இதன் பால் "இல்லாத எப்பொருளும் இல்லை" என்று திருவள்ளுவ மாலை திருக்குறளைப் பற்றிக் கூறும்.

இப்பழம் பாடல் மட்டும் தானா இப்படிக் கூறுகிறது? திருக்குறளில் "இல்லாதது இல்லை" என்பதுடன் அதில் "பொல்லாதது இல்லை" என்றும் "வெல்லாதது இல்லை" என்றும் பாவேந்தர் பாடும் புதுப் பெருமையும் திருக்குறளுக்கு உண்டுதானே! திருக்குறளில் எல்லாப் பொருளும் உண்டு என்றால் எல்லாப் பொருளும் தாம் எவை என்று கேட்கத் தோன்றும்.

ஆடு மேய்ப்பவன் ஒருவன் தான் ஆட்டை ஓட்டும் 'டோ டோ' என்னும் ஒலி திருக்குறளில் உண்டா? என்று திருக்குறள் வல்ல புலவரிடம் கேட்க அவர் "டோ டோ" உண்டே என்று கூறி,

“நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பில் பிறர்க்குரியர் டோடோயா தார்”

(149)

என்னும் பாட்டை எடுத்துக்காட்டினார் என்பார் சொல்லின் செல்வர் இரா.பி. சேது அவர்கள்.

இப்படியெல்லாம் ஒவ்வொருவர் நினைத்த சொல்லும் பொருளும் செய்தியுமெல்லாம் திருக்குறளில் உண்டா என்று ஆய்ந்து பார்க்கவேண்டியது இல்லை. அறம், பொருள், இன்பம் ஆகிய வாழ்வியல் பேற்றுக்கு வேண்டுவோர் வேண்டுவ வெல்லாம் வேண்டும் அளவாலும் வேண்டும் வகையாலும் திருக்குறளில் உண்டு என்பதே எல்லாம் உண்டு என்பதாம். புத்தம் புதுத் துறைகள் மெத்த வளரும் இற்றைக் காலநிலைக்கு, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்குறள் ஈடு தருமா? ஒத்து வருமா? என்று ஐயுறுவார் உளர். திருக்குறள் மாறி மாறி ஒழியும் புறவியல்புகளைச் சொல்லாமல் என்றும் மாறாச் சிறப்புடைய அகவியல்புகளையே நுணுகி நுணுகிக் கூறும்