உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நோக்கின் நோக்கு

எந்த எளிய செயலைச் செய்வதற்கும் அதற்கென ஒரு நோக்கு உண்டு. ஆனால் அரிய செயலைச் செய்வதற்கோ ஆழத்துள் ஆழமான நோக்கு உண்டு என்பது உலகம் அறிந்த செய்தி.

"திருவள்ளுவர், திருக்குறளை ஏன் இயற்றினார்? அதனை அவர் இயற்றிய நோக்கு என்ன?” என்பவற்றை நாம் வெளிப்பட உணருமாறு அவர் உரைத்தார் அல்லர். ஆனால், அவர் திருக்குறளை இயற்றிய நோக்கை நாம் அறிந்து கொள்ள வாய்ப்பு இல்லாமல் போய்விடவும் இல்லை.

ஒருவர் வாழும் கால நடைமுறை வழக்குகள், அவர் காலத்திற்கு முன்வாழ்ந்தவர் வைத்துச் சென்ற வழக்குகள் ஆகியவற்றை அப்படியே போற்றிக் கொள்வதில் ஒருவர் நோக்கு வெளிப்படுதல் இல்லை.

தம் காலத்து வழக்குகளிலும் முந்தையர் வழக்குகளிலும் ஏற்கத்தக்கவை அல்லாதவை அல்லது மறுக்கத் தக்கவை இவை என நிலைப்படுத்திக் கூறும் பாங்கிலே, கூறுவார் நோக்குப் புலப்படும்.

திருவள்ளுவர்

காலத்திற்கு முற்படவே பல்வேறு சமயங்கள் உருவாகி விட்டன. பலவகை வழிபாட்டு முறைகள் சடங்குகள் கிளர்ந்து விட்டன. மக்களை மேல் கீழ் எனப் பிரித்துப் பார்க்கும் பார்வையும் உண்டாகி விட்டது. மண்ணின் நலத்தையும் மக்கள் நலத்தையும், உலக நலத்தையும், உயிர்களின் நலத்தையும் காக்கத் தக்க நடைமுறைகள் இவை எனவும் இந்நெறிய எனவும் காட்டவும் நிலை நாட்டவும் வேண்டுமென வள்ளுவர் அறநெஞ்சத்தில் கிளர்ந்தது. அதனால் உலகம் உய்தலைக் கருதி நெட்ட நெடிய உழைப்பால் உலகுக்கு ஈடு ணை இல்லாத ஒருநூலை ஆக்கினார்.

முட்டுதல் மோதுதல் பகைத்தல் பழிவாங்கல் இல்லாது அனைத்துயிரும் அமைந்து இனிது வாழத் தக்க அருள் நூலை அருளினார்.