உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் நோக்கு

143

துன்பையும் தரும் துன்பிலே இன்பையும் தரும். அவ்வகையில் படும் துன்பம், இரட்டை இன்பம் ஆக்க வழிவகையாம்.

இத் துன்ப நீக்க இன்பம் இல்வாழ்விலே இயற்கையாக அமைந்து கிடப்பதை அருமையாகச் சுட்டுகிறார் திருவள்ளுவர்.

வாழ்க்கைத் துணையாகிய இல்லாள், தன் வாழ்க்கைத் துணைவன் ஆகியவனுக்கு உயிர்தளிர்க்கச் செய்யும் அமுதாகத் திகழ்கின்றாள். அவள், அவனுக்கு அமுதமானால், அவன் அவளுக்கு அமுதமாவான் அல்லனோ? அவளைப் போலவே உயிர்தளிர்க்கச் செய்வன் அல்லனோ அதனால்

“உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு அமிழ்தின் இயன்றன தோள்."

என்றார்.

(1106)

தக்க தலைவனுக்குத் தக்க தலைவி வாய்த்தால் அவர்கள் வாழ்வு, உழுது விதை தெளித்த உழவன், வித்த முளைப்பதற்கு வீழுமா மழை என வானை நோக்கிய அளவில், மழை பொழிந்தாற்போலப் பெருநிறைவுப் பெருவாழ்வாம் என்கிறார்.

“வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி"

என்பது அது.

(1192)

உலக நலம் உயிர் நலம் கருதியது நல்லறமாம் இல்லறவாழ்வு என்பது இதன் பிழி செய்தி. இனி, இல்லாளும் இல்லாளின் துணைவனும் ஒருவருக்கு ஒருவர் அமுதமாய்க் கொண்டும் கொடுத்தும் வாழும் வாழ்வோடு மட்டும் அமைவதோ இல்வாழ்வின் இன்பம்?

-

மக்கள் தம் கையில் எடுத்துப் பெற்றோர்க்கு ஊட்டும் உணவு - தங்களை ஊட்டி வளர்க்கும் பெற்றோருக்குப் பிள்ளைகள் ஊட்டும் உணவு அமிழ்தமாம். இன்ப அளவில் நில்லாமல், உணர்வும் உயிரும் தளிர்க்கச் செய்யும் உவகைப் பெருக்கினால் எவ்வமிழ்துக்கும் மேலாம் அமிழ்தாய்த் திகழும் என்கிறார்.

“அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்"

(64)