உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் நோக்கு

“தக்கார் தகவிலர் என்ப தவரவர்

எச்சத்தாற் காணப் படும்”

“வசைஎன்ப வையத்தார்க் கெல்லாம் இசைஎன்னும்

எச்சம் பெறாஅ விடின்”

(238)

173

(114)

இன்னவற்றால் இசை எச்சத்திற்கு இணை எச்சம் இல்லை என்னும் வள்ளுவம் பளிச்சிடத் தோன்றும்!

எத்தனை எத்தனை உயர்சான்றோர், உயர்அறிஞர், உயர் வண்மையர், உயர் சிந்தனையர், உயர் படைப்பாளர் உலக வரலாற்றில் இடம் பெற்றுளர் அவர்கள் அனைவரும் மக்கட் பேறு பெற்றதாலா அப்புகழ் பெற்றனர்? அவருள் மக்கட்பேறு பெறாதவர் எத்தனை எத்தனை பேர்கள்? மக்கட்பேறு பெற்றும், அம்மக்கட்பேறு துயருக்கும் - துன்புக்கும் இழிவுக்கும் - பழிவுக்கும் இடமாகியிருந்தும் அவையெல்லாம் இருந்த தடமும் இல்லாமல் மறைந்து மாய, அப்பெருமக்களின் புகழெச்சம் புவியெச்சமாய் வரலாற்றில் திகழக் காண்கிறோமே! இவற்றால் மக்கட்பேறு இல்லாமை குறையன்று என்பதும், பழிநிரயத்திற்கு உட்படுத்துவது அன்று என்பதும் வள்ளுவ நோக்காதல் விளங்கும்.

பொறாமை, அடங்காமை, பிறன்மனை நயத்தல், ஊன் உண்ணல் இன்னவை எரி பழி சேர்க்குமே அன்றி, மக்கட்பேறு இல்லாமை எரி பழி சேராது என்று கூறிய விரிவு வள்ளுவத்தில் பெரிதாம்!

அறிவன், ஆசான், கொடைஞன், மூத்தான், உற்றுழி உதவியோன் இன்னவரெல்லாம் தந்தையென எண்ணிய எண்ணுதல் தமிழ்மரபில் உண்டு. 'பெற்றால்தான் பிள்ளையா? என்னும் பெருமொழியும் தமிழ் மண்ணில் வழங்கும்' ஈன்றாள், வளர்த்தாள்,. பாலூட்டினாள், ஓலாட்டினாள். உதவினாள், மூத்தாள் எனத் தாயரும் எண்ணப்படுதல் வழக்கே!

இவற்றை எண்ணினால், எல்லாரும் இன்புற்றிருக்க வாழ்தல், "எவ்வுயிரும் தம்முயிர்போல் எண்ணி உள்ளே ஒத்து உரிமையுடையவராய் உவத்தல் என்னும் எச்சமே வாழ்வின் எச்சமாதல் விளங்கும்!”

புத்தர் பெருமானுக்கு எச்சம் துணையா? மகனா? புத்தமே அன்றோ!