உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

-

இளங்குமரனார் தமிழ்வளம் 40

அம்மக்கள், ஒரு பெற்றோர் பெற்ற மக்கள் எனினும், அவர் பேருலக நலனுக்குப் பிறந்தவர் என்பதைத்,

“தம்மில்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து

மன்னுயிர்க் கெல்லாம் இனிது"

என்றார்.

(68)

ஆக, உலக நலங்கருதிய மக்கட்பேறே உயர் மக்கட்பேறு என்பது வள்ளுவம்.

அம் மக்கள் உலக நலங்கருதியவர் எனின். பெற்றோர் நலமோ, உற்றார் நலமோ, ஊர் நலமோ, நாட்டு நலமோ கருதார் என்பதன்று! வள்ளுவம், தன்னில் இருந்து தோன்றி உலகாக வளரும் வளர்ச்சியே சீரிய செவ்விய நேரிய வளர்ச்சி என்பதை அடிப்படையாகக் கொண்டது.

மக்கட் பேற்றின் மாண்பை இவ்வாறு மகிழ்ந்துரைக்கும் வள்ளுவம் மக்கட்பேறு இல்லாமையைப் பழியாகக் கருதாது.

மக்கட் பேறு இல்லாமை ஏன்? ஆண் மக்கள் இல்லாமை கீழா நரகத்துச் சேர்க்கும் என்னும் கீழானவுரை உரையாது! அது உடற்கூறு பற்றியது. உறவு நிலை பற்றியது. அறம், பாவம் பற்றிய தன்று! என்பது வள்ளுவ உட்கிடை.

மக்கட்பேறு இல்லாமை மாப்பழி என்னும் கருத்து இம்மண்ணில் ஊடாடியது. அதனால், ‘மகப்பேறு பெற்றபின் வடக்கிருக்கும் என்னோடு வந்து இரு' என்று வடக்கிருக்க வந்த புலவனை அனுப்பிவிட உறையூர்ச் சோழன் சொல்லிய சொல் புறநானூற்றில் உண்டு. களப்போர் புகுந்தாருள் மகப்பேறு பெறாதாரைக் களம் விட்டுச் செல்லுமாறு பறையறைந்த செய்தியும் புறப் பாடலில் உண்டு.

மகப்பேறு இன்றேல் மாண்பு இல்லை என்னும் கருத்தின் ஊடாட்டம் இவை. திருவள்ளுவர் மக்கட் பேற்றை மதித்துப் போற்றியவர் எனினும், அம் மக்கட்பேறே மாண்பாவது எனக் கொண்டார் அல்லர். அவரவர் இயல் செயல் என்பவையே அம் மக்களினும் உயர் எச்சம் எனக் கண்டார். அவையே தனிப் பேரெச்சம் என்றும் கண்டார். இசை அல்லது புகழ் என்னும் எச்சம், என்றும் அழியா எச்சம்! என்றும் உலகில் அழியாத ஒன்றாகிய எச்சம் இசை எச்சமே என்றும் கூறினார்.