உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் நோக்கு

177

“செந்தமிழ் வழக்குக் காவலே எம் நூல்' எனத் தேர்ந்து செய்தார். "செந்தமிழ் நூல் வழக்கு மட்டுமன்று; செந்தமிழ் மக்கள் வழக்கும் காப்பதே எம் நோக்கு” எனக் கொண்டார்.

மொழிக்காவலாகத், "தமிழ் எழுத்துடன் பிறமொழி எழுத்தைச் சேர்க்காதே" என்றார்.

"பிறமொழிச் சொற்களை எழுதநேரின் தமிழ் மரபு கெடாமல் தமிழ் எழுத்திலேயே எழுது” என்றார்.

இந் நெறிகள் பதினேழாம் நூற்றாண்டு வரையிலும் கூடச் செவ்வையாகப் போற்றப்பட்டன.

கம்பரைத் தலைமேல் வைத்துக் கொண்டாடலாம்! கொண்டாடுகின்றனர்! ஆனால், அவர் செய்த மொழிக் காவலைக் காலில் போட்டு மிதித்துக் களிக்கின்றனரே.

இராமன், இலக்குவன் என்றும் பெயர்களைக் கம்பர் ஓரிடத்தாவது 'இ' கரம் இல்லாமல் சொல்லியது உண்டா?

‘லக்ஷ்மண்’ என்பதை 'இலட்சுமணன்' என்று கூட அவர் கூறவில்லையே! இலக்குமணனையும் 'இலக்குவன்’ ஆக்கித் தந்த படைப்பாளி அவர் என்பதை இப்பொழுதேனும் பார்த்து நடையிடக் கூடாதா?

'ஹிரண்யன்' ஹிரண்யாட்சன் கம்பர் பாடலில் இடம் பெற்ற வகை, பொன்னன், பொற்கண்ணன் என்பவை அல்லவா! கம்பரைப் பழிப்பார், இம் மொழி மரபுக் காவலைப் போற்றிக் கூற வேண்டாவா? "குணம் நாடிக் குற்றமும் நாடல்" ஆய்வு நெறியல்லவா!

தமிழ் மண்ணின் வழக்காறு காக்கும் தொல்காப்பியத்திற்கு உரைகாரர்கள் தம் வடமொழிப் புலமையும், வடவர் வழக்கின் ஆர்வமும் உந்த உரை கண்டால் அவ்வுரை செவ்வுரையாமா?

திருக்குறளுக்கு உரைப்பாயிரம் வரைய, ஆணிபிடிக்கும் பரிமேலழகர், "அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும் விலக்கியன ஒழிதலுமாம்" என்று தொடங்குவதே அவருரை எவ்வழியில் நடையிடப் போகிறது என்பதை நாட்டி விடுகின்றது அல்லவோ! அவ்வாறே தொல்காப்பியர் கூறிய மண்ணியல் நெறியைப் போற்றாமல், அதற்கு மாறாக உரையாளர் உரை வரைந்தார் என்பது அகத்திணை இயல், புறத்திணை இயல், மரபியல் ஆகிவற்றில் வெட்ட வெளியாம்!