உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. குறை நீக்கும் குடிமை

நாட்டு நல வாழ்வு எங்கே உள்ளது?

நாட்டிலே உள்ளதா? இல்லை.

வீட்டிலே உள்ளதா?

வீட்டிலேதான் நாட்டு நல வாழ்வு உள்ளது!

வீட்டிலே இல்லா நலவாழ்வு, நாட்டில் தோன்றவே தோன்றாது.

வீட்டிலே பிறந்த குழந்தை ஊருக்கு ஆகி, உலகுக்கும் ஆவது போல, வீட்டிலே பிறந்த நல வாழ்வே நாட்டுக்கும் நானிலத்துக்கும் ஆகின்றது. அந்த ஒன்றிற்கும் மூலம் உண்டு மூலத்தில் இருந்தே முளை கிளம்பும்; முளையில் இருந்தே விளைவு சிறக்கும்.

மூலம் என்பது நுண்மம், வேர், வித்து, கிழங்கு என்பன இம்மூலமே ஆதிமூலம்! இம்மூலம் போல உலக மூலம் ஒன்றுண்டு அது வீட்டு மூலத்திற்கும் முற்பட்ட கூட்டு மூலம்!

உயிரின் 'வீடு' யாது? உணர்வின் ‘உறையுள்' யாது? அது கூடு? அதுவே கூட்டம் சேர்ப்பது! அதுவே கூட்டம் ஒழிப்பது! அக் கூட்டின் சிறப்புப் பெயர் 'உயிர் நிலை' என்பது! உயிர் நிலையில் இருந்தே 'உயர்நிலை' எய்த வேண்டும் -எய்தும்- என்பது வள்ளுவத்தின் ஆழ்ந்த நோக்கு!

இன்பத்துப் பால் உள்ளீடு உளவியல்!

வளர்ந்து வளர்ந்து முழுமதியாகத் தோன்றும் திங்களைப் போல் வளர்ந்து வளர்ந்து நிறைவின் நிறைவாவது வாழ்வு என்பதைக் காட்டுவது! கலைக்காட்சி காட்டிக் கவர்ந்து கொண்டு போய் நிலைபேறாம் மெய்யியல் இஃதெனக் காட்டுவதே காமத்துப்பால்! படிப்படியாய் நிறையும் பாங்கால் 'காமம்' என்னும் பெயர் பெற்றது. 'கமம்' நிறைந்தியலும் என்பது தொல்காப்பியம். காமம் என்பது பெருகி வாழும் வாழ்வு.