உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230

இளங்குமரனார் தமிழ்வளம் - 40

நெடிது உய்க்குமாறு உண்க. என்று விரித்துக் கொள்க.

உடம்பு வாய்த்தது அரிதே! அவ்வுடம்பை அருளினோர் அரியரே! அவ்வரிதும் அவ்வரியரும் உரிய பெருமை அடைதற்கு உரிய செயலைச் செய்ய உரியார் எவர்? உடம்பு பெற்றோர் தாமே! அவர் மகவு பெற்றோர் என்றால், இவர் உடம்பு பெற்றோர் இலரா? இவரே உடலொடு கூடிய வாழ்வை நெடிது காலம் வாழச் செய்யும் வகையுணர்ந்து வாழாக்கால் எவர் என்ன வாழ்த்தியும் என்ன பயன்?

நீர் அமிழ்து! சோறு அமிழ்து! சாறு அமிழ்து! இன்பமும் நலமும் சேர்ப்பவை எல்லாம் அமிழ்து அமிழ்து உண்டும் அமிழ்து பருகியும் அமிழ்து வழங்கியும் திகழும் உடலும் அமிழ்து! அவர் உடலும் உளமும் உணர்வும் அறிவும் கொடையும் எல்லாம் அமிழ்து; இவ்வளவு அமிழ்தங்கள் வாய்த்தும், அங்கணத்துள் கொட்டிய அறிவில்லாச் செயலைச் செய்யலாமா?

வாழ்த்துப் பண்பைச் சிலம்பு தொட்ட காப்பியங்கள் காத்தன. மங்கல வாழ்த்திலே நூல் தொடங்கியது சிலம்பு. வாயிற் காவலன் கோயிற் காவலனைக் கண்டு,

"வாழிஎம் கொற்கை வேந்தே வாழி"

என்று வாழ்த்தி வணங்கிச் செய்தியுரைப்பதும், வாழ்த்துக் காதை வரந்தரு காதை என நூலை முடிப்பதும் எல்லாம் தமிழர் வாழ்த்தியல் பண்பை நோக்காக உடையவாம்.

"வாழ்க வளமுடன்

""

என்று ஒருவரை ஒருவரை வாழ்த்தி வணங்குவது கொங்கு நாட்டில் பெருவழக்காக இருப்பதும், வாழ்த்துப் பலகைகளாக இல்லங்களில் காட்சி வழங்குவதும் காணுங்கால் பழமரபு போற்றப்படுதல் பூரிப்பு ஆகின்றது! ஆனால், அப்பூரிப்பின் இடையே,

“வாழ்க வளத்துடன்”

என்று இருப்பது அல்லவோ மொழி மரபு! வாழ்த்து மரபு போற்றிய பெரு மக்கள், மொழி மரபும் போற்றியிருக்க வேண்டுமே என்பது மரபு பேணுவார்க்குத் தோன்றாமல் போகாது.