உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232

இளங்குமரனார் தமிழ்வளம் - 40

"மனிதர்காள் இங்கே வம் ஒன்று சொல்லுகேன் கனி தந்தால் கனி உண்ணவும் வல்லிரோ”

என்று அப்பரடிகள் கூவிக்கூவி அழைத்தது போலக் கூவி யழைத்தும் குறித்துக் காட்டியும் குறிப்பில் உணர்த்தியும் நாளும் பொழுதும் நல்லறிவை வளர்த்து வரும் நல்லாசான் இயற்கை. அறிவாளர் எப்படி ஆய்வாளர் ஆனார்! இயற்கை காட்டக் கண்டார்! இயற்கை கற்பிக்கக் கற்பிக்கக் கற்றார்!

வண்டு துளையிட்டு வைத்த துளையில் காற்றுப் புகுந்து வந்தது புல்லாங்குழல் ஆயிற்றே! வேட்டைக்கு எடுத்த வில், யாழுக்கும் விணைக்கும் அடியாயிற்றே? ஆடும் மயில் கூத்துக்கு முதல் ஆயிற்றே!

ஆட்டத்தைக் காட்டித்தானே ஆடும், ஆடையும் பெயர் பெற்றன! முத்தமிழ்ப் பகுப்பின் மூலம் இயற்கைக் கொடையல்லவா! மாந்தன் நீந்தவும் பறக்கவும் கற்றது எப்படி? மீனும் பறவையும் மீட்டிய இயக்கங்கள்தாமே அவை! கொதிக்கும் உலைமூடித் துள்ளல், நீராவி இயங்கங்களை ஆக்கிற்றே! இப்படி எத்தனை கண்டுபிடிப்புகள். நியூட்டனுக்கு முன்பு புவியீர்ப்பு இல்லாமலா ருந்தது? ஐன்சுடீனுக்கு முன்பு அணுவியம் இல்லாமலா இருந்தது? மறைமலையடிகளுக்கு முன் தனித்தமிழ் இல்லாமலா இருந்தது?

பாவாணருக்கு முன் தமிழுக்கு உலக முதன் மொழி நிலை இல்லாமலா இருந்தது? தோன்றத் தோற்றுவித்த தோன்றல்கள் தாமே இவர்கள். முன்னே அறியாததை அறிந்து கொண்டவர் களுக்கு என்ன தோன்றுகிறது? வியப்புத் தோன்றுகிறது. புதிதாக ஒன்றை அறியும்போது நாம் இதுவரை இதனை அறிந்து கொள்ளவில்லையே என்னும் அறியாமை புலப்படுகின்றது! அந்த அறியாமை, அறிவின் வெற்றியாக ஒளி செய்கின்றது.

ஒன்றா, இரண்டா? ஓராயிரமா ஈராயிரமா? அறியாமை உண்டாக உண்டாகவே அறிந்தமை வெற்றிக் கொடி நாட்டியமை விளக்கமாகின்றது. அறிந்தமை வெற்றி நடைபோட்ட நொடியே. அறியாமை தலை தாழ்ந்து தோற்றதை ஏற்கின்றது. “அறிதோறும் அறியாமை" என்னும் மாமணித்தொடர் அறிவியல் இலக்கண மாகத் திகழ்ந்து விடுகின்றது!

நேற்று என்ன, போன நொடியில் அறியாததை இந்த நொடியில் அறிந்ததும் அறிவாளிக்கு என்ன தோன்றுகின்றது? போன நொடிவரை இதனை அறியாது இருந்தேனே என்பது