உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238

இளங்குமரனார் தமிழ்வளம் - 40

இல்லாச் சூழல் இருந்தன; கொண்டு கொடுத்தல் அண்டை அயலாய் இருந்தன. ஊர் விளைவும், ஊரைப் பேணின. போரும் பூசலும் நிகழ்ந்தே வரினும் தொடர்பில்லாதவர் தொல்லை இல்லாமல் இருக்கும் சூழலும் வாய்த்தன. ஆனால், இற்றை ஊர் நிலை-நாட்டு நிலை-தலைகீழ் மாற்றம்!

“தனி ஒருவர் நலம், வீட்டு நலம் சார்ந்தது; வீட்டு நலம், ஊர் நலம் சார்ந்தது; ஊர் நலம் பேணல், ஒவ்வொருவர் கடமையுமாம்" என்பது வள்ளுவ உள்ளம். ஊருணி' நீர்த் தூய்மையை, ஊர்தானே காக்க வேண்டும்! உள்ளூர்ப் பழுத்த 'பயன்மர’த்தை ஊர்தானே காக்க வேண்டும்! 'மருந்துமர’த்தை, ஊர் மக்கள் தாமே காக்க வேண்டும்! கைம்மாறு கருதா மழைக் கொடையைக் கற்சிறையிட்டு ஊரவர்தாமே காத்துப் பயன் கொள்ள வேண்டும்! இவை அறத்துப்பால் ஒப்புரவு முழக்கம்!

இன்பத்துப்பால் முழக்கம், “மனங்கலந்த உறவாக 'இனம்' இருக்க வேண்டும்” என்பது. தனிமாந்தர்க்கு மன நலம் வேண்டும். ஊரவர்க்கு இன நலம் வேண்டும். மன நலம் இல்லார் வாழும் இல்லம், பாம்போடு குடியிருக்கும் குடிசை. “நெருப்பின் இடையே உறங்கினாலும் வறுமையிடையே கண்மூட இயலாது” என்பது வள்ளுவம். வறுமையிடையே கூட வளமாக வாழலாம், மன நலம் மட்டும் வாய்ப்பாக இருந்தால்!

ஒரே ஓர் உடை! அதனை இரண்டாகக் கிழித்து உடுத்திக் கொண்ட நிலை! ஆனால், ஒன்றிய உள்ளம், ஒரு நாள் என்ன? அரை நாள் வாழ்வும் போதும் என்னும் நிறைவு!

அவள் பிறந்த வீட்டில் தேனொடு பால் கலந்து பருகவும் வெறுத்த செல்வி! ஆனால், ஓடையில் தேங்கிய கலங்கல் நீரை, உடைந்த கலத்தில் எடுத்துப் பருகுகிறாள் விருப்புடன்! ஒரு வேளை விட்டு ஒரு வேளை உண்கிறாள்! உயிர் தளிர்க்க உவப்படைகிறாள். புகுந்த வீட்டில் கொண்ட கொழுநன் குணக் குன்றமாக இருத்தலால்!

உள்ளம் ஒன்றிய வாழ்வு தானே வாழ்வு! ஒவ்வொரு வர்க்கும் துணை வேண்டும்; கட்டாயம் வேண்டும் அத்துணை சொற்றுணை; பேச்சுத்துணை; நாத்துணை;

பேச்சுத்துணை, உசாத்துணையாம்.

துயர்த்துணை, அசாத்துணையாம்!