உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளில் ஒப்புரிமை

289

விருப்பு என்பது தன்னல நாட்டம்; வெறுப்பு என்பது தன்னல நாட்டம் நிறைவேறாக் கால் உண்டாகும் வெறுப்பு; இரண்டுமே ஒருவழிப்பட்ட இரட்டை முரண்கள். தன்னல நாட்டமில்லானுக்கு விருப்பு உண்டோ? வெறுப்பு உண்டோ? இல்லை!

விருப்பு வெறுப்பு இலாத நெஞ்சம் தூயநெஞ்சம், அந்நெஞ்சில் தீயது இருக்க இடமில்லை! ஒளி புகுந்த அளவில் இருள் அகல்வது போல இருள் சேர் இருவினையும் பொருள் சேர் புகழ்புரிவாரிடத்துத் தாமே அகன்று விடுகின்றன. மயங்குதல் கழன்றுவிட்ட இடத்தில், மயக்குதலுக்கு இடம் இல்லையே!

மனமாசின்மை பொறிவாய்கள் ஐந்தையும் கட்டுக்குள் வைக்கிறது. பொறிகள் ஐந்தும் ஒழுங்குற்றுப் பக்குவப்பட்டுப் பழகிப் பழகிக் தழும்பேறி விடுகின்றன. அதனால், பொய்யுணர் வற்று, மெய்யுணர்வுற்றுச் சிறக்கின்றன. செய்யும் செயல்கள் அனைத்தும் செம்பொருட் செயல்களாகி விடுகின்றன. வாழும் போது வழிகாட்டியாகச் சிறந்த வாழ்வு, மறைவின் பின்னரும் நினைவார்க்கு வழிகாட்டியாய் இறவாப்புகழில் நிலைக்கின்றது!

விருப்பு வெறுப்பு இல்லை. மயக்கும் இருண்மை இல்லை. பொறிகளின் குறும்புகள் இல்லை; ஒப்பில்லா ஒருநிலை ஒன்றிய நெஞ்சில் மனக் கவலைக்கு இடமேது? அத்தன்மை அடையார்க்கு மனக்கவலையை மாற்றிக் கொள்ள வகைதான் ஏது?

மனத்துக்கண் மாசின்மையாம் அறத்தில் நிலைபெற்று அருளாளியாகத் திகழ்பவன் அறவாழி அந்தணன். அவன் நேர்ந்தும் நிறைந்தும் சேர்ந்தும் செறிந்தும் உறையும் இடமாகத் தன்னைத் தந்து விட்டவனுக்குப் பாவக்கடலில் வீழும் நிலை உண்டா? அஃதுண்டானால் அன்றோ அதனை நீந்திக் கடக்க வேண்டும் இடர் உண்டு! பாவக் கடலின் பாங்கரும் செல்லா அறவாழி அந்தண வாழ்வனுக்கு அக்கடலை நீந்திக் கடக்கும் ர் எப்படி உண்டாகும்?

ஓடாப்பொறியால் ஒரு பயன் உண்டா? இயற்கையாம் உடற்பொறியாயின் என்ன! செயற்கையாம் பொறியாயின் என்ன! அவற்றின் முறையான இயக்கமே பயன்பாடாம்! இயங்காமை அழிபாடாம்!

“கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப் படாத செவி”

(418)