உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288

இளங்குமரனார் தமிழ்வளம் - 40

ஒழுகிக் காட்டினார் அல்லது ஒழுகிக் காட்டுவார் ஒருவரைக் கண்டன்றே அவர்தம் ஒழுக்க நெறியைப் பற்றி நிற்றல் கூடும், பொருள் சேர் புகழ் புரிந்து நடாத்தலும் கூடும்! ஆதலால் வழிகாட்டியாய் நிற்கும் குருவன் ஒருவனே இறைவன் என வள்ளுவர் கொள்கிறார் என்பது விளங்கும். இதற்கும் அகர முதல எழுத்தெல்லாம் என்னும் தொடக்கமே சீரிய சான்றாம். முதலதிகாரப் பொருண்மை :

அகரமும் எழுத்தே; ஆகாரமும் பிறவும் எழுத்தே; அகர எழுத்திற்கும் மற்றை எழுத்துகளுக்கும் உள்ள வேற்றுமை என்னை எனின், அகரம் தலைமை அல்லது முதன்மை உடையது. மற்றை எழுத்துகளின் இயக்கத்தில் கலந்து நிற்பது என்பனவே. இதுபோல் இங்குக் காட்டப்படும் 'ஆதி பகவன்' உலகுக்கு முதலும் இயக்கமும் ஆபவன் என்பதே.

முதல் என்பதற்கு முதன்மை, முதலாகிய பொருள், முதலாம் எண், மூலம், கிழங்கு, வித்து, வேர், அடிப்படை இன்னபொருள் விரிந்துள்ள அமைதி இறையின் விரிநிலை விளக்கம். அடுத்த குறளில் "கல்வியறிவால் உண்டாகும் பயன் வாலறிவன் இவனென ஒருவனைக் கண்டு அவன் வழியில் சார்ந்து நிற்றல் என்று குறிப்பிடுகிறார்.”

அவன் நூலறிவன் அல்லன், “நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும் தன் உண்மை அறிவே மிகும்" என்பது போன்ற நுண்ணறிவும் உண்மையறிவும் மட்டும் உடையானும் அல்லன். மனத்துக்கண் மாசு நீங்கிய குருமணியன்! அவனே வாலறிவன். நிலையாமை அறிந்து, நிலைப்புத் துறவறிந்து, பொய்யுணர்வு அகன்ற மெய்யுணர்வாளன்; தவா அப் பிறப்பீனும் அவாவறுத்து, ஊழையும் உப்பக்கம் காணவல்ல உரவோன்! அவனைச் சார்ந்து நின்று அவன் வழியைப் பற்றிக் கொள்ளாக்கால் கற்றவன் கற்றவன் ஆகான்.

வாலறிவன் வன்பு, துன்பு, சூழ்ச்சி, தாழ்ச்சிக் களங்களில் அமைவான் அல்லன். அவன் மாசற்ற மலரிடத்தான்; ஆம்! அவன் மாசற்றமணமலர் இடத்தான்; அம்மலர்மேல் இருந்து இயக்கவல்லான். அம்மெல்லியல் நல்லோன் இருந்து இயக்கப் படுவோன் நெடிது வாழ்வான்.

'உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்

பெற்றியனை'ப் பேணிக் கொண்டபின்னை மலைவு ஏது?

மயக்கம் ஏது?