உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350

இளங்குமரனார் தமிழ்வளம் - 40

அதனால்,

“தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின் என்குற்றம் ஆகும் இறைக்கு”

(436)

என்றும்,

“எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு கொள்ளாத கொள்ளாது உலகு”

என்றும் குறித்தார்.

(470)

தனிவாழ்வில் சிக்கனம் நன்றே; ஆனால் கருமித்தனம் ஆகவே ஆகாது. அது குடும்பவாழ்விலேயும் வெறுப்பையே தரும்; அது பொது வாழ்வில் இருப்பின், வெளிப்படத் தூற்றவே படும். ஆதலால், அத்தன்மையை அகற்றல் அல்லது இல்லாது இருத்தல் வேண்டும்.

மானம், போற்றத் தக்கதுதான். ஆனால் குடிமானம் காக்கத் தன்மானத் துறப்பும் கொள்ளல் வேண்டும் என்பது வள்ளுவம். அஃது இல்லாமையால் எத்தனையோ குடிகள் கெட்டுள்ளன, கெட்டு வருகின்றன. அந்த மானத்தைப் போற்றுவார், "தாம் போற்றும் மானம் பிறருக்கும் உரியதே; தமக்குமட்டும் உரியது ஆகாது” என்று கருதவேண்டும். அவ்வாறு கருதாமல் தமக்கே உரியதாகக் கருதும் மானம் மாண்பு இறந்த மானம் ஆகும்; அதுவும் தலைமைக்குக் கேடாம்.

மகிழ்வு கொள்ளலிலும் அளவு உண்டு; முறையுண்டு; வகையுண்டு. சிலமகிழ்வுகள் பிறருக்கு அருவறுப்பானவை. அவற்றைத் தலைமை கொண்டிருத்தல் கூடவே கூடாது.

மணிபிடித்து முற்றிய கதிர் தலைதாழும்; பதவி உயர்வு வரவரப் பண்புநலமும் சிறக்க வேண்டும்; பணிவிலாப் பண்பு பண்பாகாது; பணிவிலாப் பணியும் பணியாகாது. ஆதலால் தலைமையர் தம்மை வியந்து செருக்குதலும், தருக்குதலும் ஆகா. நேருக்கு நேர் பழிக்கப் படாவிடினும் நாளாவழியில் தலைக்கனம்' மண்டைக்கனம்' என்னும் பழிப்புக்கே ஆளாக்கும்.

தனக்குள்ள தனிவிருப்பு வெறுப்புகளைத் தலைமை பிறர் அறியக் காட்டிக் கொள்ளல் ஆகாது. காட்டிக் கொண்டால் அதனாலேயே அழிவு ஏற்பட வாய்ப்பு உண்டு. அதனைக் கட்டிக் காத்தால் கெட்டுப்போதல் இல்லை.