புறநானூற்றுக் கதைகள்
91
மன்னவன் மனக்குழப்பம் கண்டு மருண்டனர் மாந்தர். “எங்கே போகிறார்? ஏன் போகிறார்?” என்பது புலப்படாது புலம்பினர். நல்லோர் கூட்டம் மன்னனைப் பின் தொடர்ந்தது. நங்கையரும் நம்பியரும் போட்டியிட்டு முந்தினர். சீறியெழுந்த சிறு தன்மையாளர் தவிர்த்து அனைவரும் பின் சென்றனர்.
வேந்தன் ஆற்றின் இடையே இருந்த திட்டை ஒன்றிலே வடக்கு நோக்கி உட்கார்ந்தான்! ஆ! ஆ! வேந்தன் வடக்கு இருக்க அல்லவோ வந்துள்ளான் என்று வருந்தினர் உடன் வந்தோர்.
வாழ்க்கையில் ஏதாவது ஒரு காரணத்தால் வெறுப்புக் காண்டு இறக்கக் கருதியவர்கள் ஓரிடத்தே வடக்குத் திசை நோக்கி உட்கார்ந்து வெப்பமும் குளிரும் பொருட்படுத்தாது அமைந்து, சோறும் நீரும் மறுத்து இறப்பர். இவ்வாறு இருந்து இறப்பதையே வடக்கிருத்தல் என்பர். மானம் கருதிய சோழனும் வ்வழியே தனக்குத் தகுந்தது என்று தேர்ந்து கொண்டான். வீரன் அல்லனோ அவன்!
வேந்தனைத் தொடர்ந்து வந்தவர்கள் பலவாறாய்ப் பேசினர்; வருந்தினர்; அலறினர்; சோர்வில் ஆழ்ந்தனர். சிலர் திடம்கொண்டு “வேண்டாம்; வேண்டாம் இச்செயல்” என்று தடுத்தனர். ஆனால் கொண்ட கொள்கையிலிருந்து சிறிதும் அசைந்து கொடுக்கவில்லை சோழன். தடுத்து நின்றவர்கள் தெளியுமாறு எடுத்துரைத்தான்.
எனக்கு வடக்கிருத்தல் போல் செய்யத் தக்க நல்வினை வேறு ஒன்றும் இல்லை. தெளிந்த அறிவு இல்லாதவர்களே 'இந் நல்வினை செய்யலாமா? செய்யக்கூடாதா?” என்று ஐயங் காண்டு அஞ்சிச் சோர்வர். இதனைக் கேளுங்கள்: யானை வேட்டைக்குச் செல்லுகின்றான் ஒருவன். அவ்வேட்டை கிடைத் தற்கு அரியதே. எனினும் யானை வேட்டத்தில் முனைந்து நின்று யானைகொண்டு மீள்கிறான். மற்றொருவன் பறவை வேட்டைக்குச் செல்கின்றான். அவ்வேட்டை மிகவும் எளியது. பேரும் புகழும் தருவதும் இல்லை. எனினும் பறவை கைவரப் பெறாது வறிதே மீளுவது உண்டு. இவற்றை நோக்கினால் புலப்படுவது என்ன? ‘உயர்ந்த நோக்கத்தினர் தம் உயர்ந்த நோக்கம் கைவரப் பெற்றே தீர்கின்றனர்; தாழ்ந்த நோக்கத்தினர் அதனை இழந்துவிட்டு ஏமாற்றம் எய்துகின்றனர். எண்ணத்தைப் பொறுத்தே முடிவு ஏற்படுகின்றது; என்பது புலப்பட வில்லையா?