13. கணியன் பூங்குன்றன் கதை
ஊருக்குப் பக்கத்தே திரடு ஒன்று இருந்தது. அதற்குக் கோயில் திரடு என்பது பெயர். அத்திரடு ஒரு காலத்தில் பொலிவும் வலிவும் மிக்க கட்டிடங்களோடு இலங்கியது. அதன் பழமைக்குச் சான்று காட்டுவது போல் கல்லால் அடித்து வைத்த காளை உருவம் ஒன்று பாதியளவாக மண்ணில் புதையுண்டு கிடந்தது. அதன் பக்கத்தில் இரண்டு தூண்கள் நின்றன. அவற்றின் இடையே ஒரு மணி தொங்கிக் கிடந்து. அது காற்றின் தாக்குதலால் அசைந்து அசைந்து மெதுவாக ஒலித்துக் கொண்டிருந்தது.
L
வெண்கல மணியின் ஒலிக்குப் பின்னொலி போன்று, பக்கத்தே மேய்ந்து கொண்டிருந்த பசுவின் கழுத்துமணி ஒலித்தது. பசு எலும்பும் தோலுமாக இருந்த படியால், அதன் மணி ஒலி, காற்றால் அசைக்கப்பட்ட மணி ஒலியை விஞ்சுவதாக இல்லை. பசு, புல்லே காணப்படாத அந்த மேய்ச்சல் நிலத்தில் நாவால் நக்கி நக்கிப் பசியை ஆற்றிக் கொண்டு இருந்தது.
பசுவிற்குச் சற்றுத் தொலைவில் எருமை மாடு ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. அதன் வரிச்செலும்புளை எண்ணி விடலாம் போல் மெலிந்து இருந்தது. அதன் பருத்த கொம்பையும், கனத்த தலையையும் தாங்குவதற்கு ஏற்ற வலிமை கழுத்தில் இருக்கவில்லை. ஆம்! அதன் தலையும் கொம்பும் அதற்குச் சுமையாக இருந்தன. இந்நிலையிலும் அதன் முதுகில் ஒரு காக்கை உட்கார்ந்து பழம் புண்ணைக் குடைவதை விடவில்லை. உணர்ச்சி கெட்டு, உரமும் அற்றுத் திண்டாடிக்கொண்டு அசையும் மாட்டைக் குத்திக் குடைவது காக்கைக்கு எளி தாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது என்பதற்கு ஐயமே இல்லை. எங்கிருந்தோ ஒரு கரிக்குருவி வந்தது. அதன் கண்ணோட்டம் காக்கை மீது பாய்ந்தது. காக்கையைத் துரத்திக் கொண்டு விடாமல் நெடுந்தொலைவு வெருட்டிச் சென்றது. கொழுத்த காக்கையும் ஊக்கமிக்க குருவியை எதிர்த்து நிற்க முடியவில்லை! ஓடி மறைந்து போய் விட்டது.