192
இளங்குமரனார் தமிழ்வளம்
―
5
கப்பல் வாணிகம் செய்து வந்தான், ஆமூரே அன்றி வேறு பல ஊர்களிலும் அவனுக்குக் கடைகள் இருந்தன. ஆற்று மணலை எண்ணினாலும் அவன் செல்வத்தை எண்ணிவிட முடியாது என்னும் அளவுக்குச் செல்வனாக இருந்தான்,
அச் செல்வன் பெயரைச் சொல்லி எவரும் அழைப்பதே இல்லை. நாவாய் ( கப்பல்) வாணிகம் செய்து வந்ததால் நாய்கன் என்று அழைத்தனர். அவன் பெருமை பெற்றதான உறையூரினன். அவனது வணிகக் கிடங்குகளும், குடியிருப்பு மாளிகைகளும் அங்குதான் இருந்தன. அவன் ஆமூருக்கும் வந்து தங்குவது உண்டு. இதனால் பெருங்கோழி நாய்கன் என்று அழைத்தனர். 'கோழி' என்னும் பெயர் உறையூருக்கு உண்டு.
பெருங்கோழி நாய்கன் செல்வத்தைப் போலாகப் பண் பிலும் சிறந்தவனாக இருந்தான். பேரறிவும் பெற்றிருந்தான். அவன் மனைவியும் கல்வியறிவுகளில் சிறந்து விளங்கினாள். இவர்களின் இல்வாழ்க்கைப் பயனாக ஒரு நன்மகள் பிறந்தாள். அவளுக்குத் தாய் தந்தையர் ‘நக்கண்ணை' என்னும் அருமைப் பெயர் சூட்டி, அன்புடன் வளர்த்து வந்தனர்.
கல்வி, செல்வம், பண்பு அனைத்தும் ஒருங்கே கொண்ட நற்குடும்பத்தில் பிறந்த நக்கண்ணைக்கு என்ன குறைவு இருக்க முடியும்? சிறந்த நிலையிலே வளர்ந்து வந்தாள். “இளமையில் கல்' என்பதன் படி கற்று, ‘ஓதுவது ஒழியேல்' என்பதன்படி நின்று, 'ஏடது கைவிடேல்' என்னும் பொன்னெறி போற்றி இருந்த நக்கண்ணை, எண்ணிய கருத்தினை வண்ணம் குலை யாமல் பாவாக வடித்துத் தரும் பேறு பெற்றிருந்தாள்!
“புலவர் பெருமாட்டி ஒருத்தியைப் பெற்றெடுத்தேன் என்னும் பெருமையோடு செல்வன் மகிழ்ந்திருந்தான். மகளின் மாண்பினை அறிந்து ஈன்ற அன்றினும் தாய் பெரிது மகிழ்ந்து இருந்தாள்.
நக்கண்ணை பாடல் ஒன்றை ஒருநாள் இசையுடன் பாடிக் கொண்டிருந்தாள். அதற்கு ஏற்பத், தாய் யாழ் மீட்டினாள். மாடத்தில் எழுப்பிய மண் குடிசையில் நுழைய வெட்கப்படுமா? மாளிகையில் மணக்கும் மல்லிகைப்பூ மண்குடிசையை ஒதுக்கி விடுவது இல்லையே! இசை இன்ப வெள்ளமாக இருந்தது. அந்தத் தேனைக் காதல் பருகும் வண்டானான் கிள்ளி! மெய்ம் மறந்து கேட்டுக் கொண்டு இருந்தான். இசை முடியும் தறுவாயில் மாடிப்பக்கம் நோக்கினான். ஒரு சாளரத்தின் வழியே ஒரு செந்தாமரை முகத்தைக் கண்டான்.