262
இளங்குமரனார் தமிழ்வளம்
6
―
5
என்னலமே என்குறி என்பதால் எத்தகைய கயமை நிகழினும் என்னவென் வன்று கண்டு கொள்ளாமல் ஒட்டிக் கொள்ளும் ஒட்டடைப் பிறவியர் இலரா?
66
என் கூட்டில் உள்ளவனா அவன் தூயன்; மாற்றான் கூட்டில் இருப்பவனா அவன் தீயன்” என்று கண்ணை இறுக மூடிக் கொண்டு உலகறிந்த பொய்ம்மைக்கு இருப்பாகிக் கிடக்கும் தலைமையர் இலரா?
“அறத்தைத் தான் சொல்ல வேண்டும்; ஆனால், அவ்வறம் என் பக்கம் இருப்பதாகவே கூற வேண்டும்; இல்லாக்கால் என் பகையே” என்னும் மூட முனைப்பாரை ஒட்டியிருப்பாரும், உவகையால் பாராட்டும் போலிமை நடிப்பாரும் கூட்டுறவாக இருந்து நாட்டைக் கெடுத்து வரும் போழ்திலே தமிழினியர் உள்ளம் நாணிக் குனியாமல் இருக்குமா? 'அந்த உணர்வு எங்கே?” என்று வினவாமல் இருக்குமா?
வஞ்சக வலை விரிப்பையே வாழ்வாகக் கொண்டவர்கள் போகட்டும்!
குணக் கேட்டையே கண் கண்ட கடவுளாகக் கொண்டு குலவுவார்கள் ஒழியட்டும்!
கொலை செய்து புதைத்த குழியிலே கொடி முல்லை நட்டு மணங் கொள்ளும் மணவாளர்கள் நீங்கட்டும்!
பொய்ம்மையே பெருக்கிப், போலிமையே நெருக்கிப் புன்மைக்கு இடமாகிப் பொருந்துபவர்கள் தொலையட்டும்! தமிழ் வாழ்வுடைய தமிழர்க்கேனும் தமிழ்த்தகவு வேண்டாவா? தகவமைந்த தமிழினியரைக்கண்டு வாழ்த்தும்
தகவு வேண்டாவா?
ஒரு தலைவன்; வீர மிக்கவன்; அதே பொழுதில் ஈரமும் மிக்கவன். வீரத்தினை எங்கு எப்படிக் காட்ட வேண்டும் என்பதும் அறிவான். ஈரத்தினை எங்கு எப்படிக் காட்ட வேண்டும் என்பதும் அறிவான். ஆதலால், அவனை வீரச் சுற்றம் ஒருபால் சூழ்ந்திருக்கும்; ஈரச் சுற்றமும் ஒருபால் இணைந் திருக்கும். அச்சுற்றங்களுள் பிணக்கம் உண்டாக அவன் நடந்து கொண்டது இல்லை. அவர்கள் பிணங்கியதும் இல்லை. அவன் தேர்ச்சித் திறம் அவ்வாறு பாலமாக இணைத்திருந்தது.