புறநானூற்றுக் கதைகள்
17
கூட்டம் அழிந்தது. ஊருண்கேணியாகவும், நடுவூர்ப் பழமர மாகவும் பயன்பட்டுவந்த வள்ளற் கோமான் காரி களத்திலே பட்டு மாய்ந்தான்.
காரி இறந்த பின்னாவது கிள்ளி வளவன் அமைதி கொண்டான் இல்லை. மேலும் வெஞ்சினம் கொண்டான். காரியின் பரம்பரையையே அழித்துவிடுவது என்னும் உணர்ச்சிக்கு ஆளானான். அப்படியே; காரியின் சின்னஞ்சிறு புதல்வர் இருவரையும் இழுத்துக்கொண்டு வருமாறு உத்தரவிட்டான். வந்த சிறுவர்களை யானைக் காலின் கீழ்க் கிடத்திக் கொல்லவும் ஏற்பாடு செய்தான். அருள் நெஞ்சத்தினரான கோவூர் கிழார் மட்டும் காலத்தால் நல்லுரைகூறிக் கிள்ளிவளவன் மனத்தை மாற்றாமல் இருந்திருப்பாரேல் அழியாப் பழிக்கு ஆளாகி இருப்பான். வள்ளல் வழிவந்த ஒரு குடியையே ஒழித்துக்கட்டிய குடிகேடனும் ஆகியிருப்பான்! கோவூர் கிழார் செய்த உதவி காலத்தால் செய்த உதவி! அது ஞாலத்தின் மாணப் பெரிது அல்லவா?