உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரும் புலவர் மூவர்

355

எத்தனையோ நாட்களாக அடுப்பு ஏற்றுதற்கு வாய்ப்பு இல்லாது போய்விட்டது. காட்டிலே முளைக்கும் காளான் அடுப்பிலே முளைத்தது. வெயிலும் மழையும் தாராளமாக விழுந்தாலன்றிக் காளான் முளைக்காது! ஆனால் சாத்தனார் வீட்டு அடுப்பிலே காளான் முளைத்து விட்டது. காரணம் என்ன? கூரை வேய்ந்து குடியிருக்கவும் வாய்ப்பில்லாமை தான்.

என்னே வறுமைக் கொடுமை

"செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும்”

என்ற பொன்னெறியைப் பட்டினி கிடந்து கொண்டே எத்தனை நாட்களுக்குத்தான் போற்றி ஒழுக முடியும்? சிறிதேனும் வயிற் றுக்கு ஈந்தால் அல்லவா செவியுணவையும் ஏற்றுக்கொள்ள முடியும்? சாத்தனார் ஒருவாறு தாங்கிக் கொண்டார் பசியை! அவர் பண்பறிந்து நடக்கும் கற்புடை மனைவியும் பொறுத்துக் கொண்டார்! ஆனால் இவர்கள் மட்டுமா வீட்டில் இருக் கின்றனர்?

6

“குறுகுறு நடந்து சிறுகை நீட்டி, இட்டும் தொட்டும் கௌவியும் துழந்தும், நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்து, மயக்குறும்” மழலை பொழிய வேண்டிய சின்னஞ்சிறு குழந்தையு மல்லவா இருக்கின்றது? பெற்ற மனத்தில் இரக்கம் இருக்கின்றது. ஆனால் வாழ்க்கைக்கு வேண்டிய பொருள் சுரக்க வழியில்லை. நடமாட முடியாத நிலைமைக்கு ஆளாகித் திரியும் தாய் நிலைமையைக் குழந்தையோ அறியும்! "பால் பால்” என்று தாய் மடிமீது மோதிக் கொண்டு வருகின்றது. தாய்க்கோ வயிற்றுக்கடி ஒரு பக்கம்; பால் குடிக்க முனைந்து முட்டி மோதிச் சுவைத்துக் கடித்தும் பால் வராமையால் விம்மி விம்மியழும் குழந்தையை நினைத்த மனத்துடிப்பு ஒரு பக்கம்! ஐயோ பாவம்! தாயின் கண்கள் அருவியாகிக் கொட்டுகின்றன; குழந்தையோ கண்ணீர்த் துளிகளால் நனைந்து கொண்டே தாயை நோக்குகின்றது! குழந்தைமீது பரிவு கொண்ட தாய் தம் கணவரை நோக்கு கின்றார்! கணவர் யாரை நோக்குவது?

புலவர் சாத்தனாரால் வீட்டில் இருப்பதற்கு இயல வில்லை. “எங்கேனும் சென்று பொருள் பெற்றுத் தீர வேண்டும்" என்ற முடிவுக்கு வந்தார். அதனால் பாடுவோர் புகழ் கேட்டுப் பரிசு தரும் பண்புடையர் எவரெனத் தேடத் தொடங்கினார்.