பெரும் புலவர் மூவர்
393
தம் கருத்துக்களைப் பத்துப் பாடல்களால் பாடிச் சிறப்புச் செய்தார். அவை பதிற்றுப்பத்தில் ஒன்பதாம் பத்து எனப் பேர் பெற்றுத் திகழ்கின்றன. அதன் பின்னரும் அங்கேயே தங்கியிருக்க விரும்பாதவராய்ப் பெருங்குன்றூர் செல்ல விழைந்தார். அரசனும், புலவரின் பெருமைக்கேற்றபடி அவரை உயர்ந்த யானை மேல் ஏற்றி வைத்து ஏவலாளர்களுடன் ஊருக்கு அனுப்புவித்தான். ஊர் வந்து சேர்ந்தார்.
வியந்தார் புலவர்
ஊருக்கு வந்த புலவர் பெருவியப்புக்கு ஆளானார். என்ன வெனில் பெருங்குன்றூர் தாம் பிரிந்து வந்த போது இருந்த நிலைமையிலே இப்பொழுது இல்லை. ஊராரனைவரும் மகிழ்ச்சியிலே திளைப்பதைக் கண்டார். பூத்த மலர்போல அனைவர் முகமும் அகமும் திகழக் கண்டார். வீடுகள் அனைத்தும் அழகு அழகாகக் காட்சிதரக் கண்டார். இடிந்ததும் கூரை போனதும், சிதைந்ததுமான வீடுகளையோ, வாடிவதையும் மக்களையோ அவர் காணவில்லை.
உழவுக்குரிய வாய்ப்புக்கள் அத்துணையும் செய்யப் பெற்று வளம் சிறந்து காணப்பெற்றன. எங்கும் பச்சையும் பயிரும் கீரையும் கிழங்கும் காயும் கனியும் ஆகவே காணப்பெற்றன. வேறோர் ஊருக்கு வந்து விட்டோமோ என்ற திகைப்பும் ஏற்பட்டது. ஆனால் வரவேற்க வந்தோர் அனைவரும் “பெருங் குன்றூர் கிழார் வாழ்க!” “புலவர் பெருமகனார் வாழ்க!” என்று வாழ்த்திக்கொண்டு நிற்பதைக் கண்டே தம் ஊர் என உறுதி காண்டார். அதன்பின் ஆங்கிருந்தவர்களொடும் அளவ ளாவிப் பேசி “ஊரும் மனையும் வளமிகப்” படைத்தவனும், “ஏரும் இன்பமும் இயல்வரப்” பரப்பியவனும் சேரமான் இளஞ் சேரல் இரும்பொறையே என்பதை அறிந்தார்.
"எனக்குத் தெரிந்தால் இச்செயலினை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்” என்று எண்ணியே என்னைத் தன் அரண் மனைக் கண்ணே திங்கள் பல தங்கியிருக்குமாறு செய்துள்ளான் போலும்! கைம்மாறு வேண்டாத இக் கடமையையுடைய சேரன் கொடை, மழைக்கு ஒப்பாவதன்றி எதற்கோ ஒப்புக்கூற இயலும்? வேண்டா என மறுக்கும் பொழுதும் அவரறியாமல் தரும் வள்ளல்கள் தமிழகத்தன்றி எங்கே பெருக வாழ்ந்தார்! அவர்கள் வாழ்க!” என்று திசைநோக்கி, உள்ளம் களிதுளும்ப வாழ்த்தினார்.