உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

394

புலவர் வீடு

இளங்குமரனார் தமிழ்வளம் 5

பின்னர் புலவர் தம் வீட்டினை அடைந்தார். அங்கே குவிக்கப் பெற்றிருந்த அணிகலங்களையும், அழகுப் பொருள் களையும், பொன்மணிகளையும் அளவிட்டுக் கொண்டிருக்க அவர் விரும்பவில்லை. “சேரல் வாழ்க" என்றே அவர் சிந்தை மீண்டும் கூறியது. ஊரார் அனைவரும் புலவரை வாழ்த்தினர். புலவரோ தமிழை வாழ்த்தினார். "வாழ்க தமிழ் வளம்!" என்று வாழ்த்திக் கொண்டே இனிது வாழ்ந்தார்.

மலைக் காட்சி

பெருங்குன்றூர் குறிஞ்சி நிலத்தது என்றும், கிழார் மலைக் காட்சிகளில் தோய்ந்து நின்று கண்டு களித்தவர் என்றும் முன்னரே அறிவோம். கிழாரின் மலைக்காட்சிச் சிறப்பினை அவர்தம் பாடல்கள் காட்டுகின்றன. அவற்றுட் சிலவற்றை இங்கே காண்போம்.

"மலைப் பகுதியிலே புற்று ஒன்று காணப்படுகின்றது. அது ஈயல்கள் வாழ்வதற்காக அமைத்துக் கொண்டதாகும். செறிந்த மரக்கூட்டத்தின் இடையே புற்று இருப்பதாலும், ஓயாமல் ஒழியாமல் அங்கு மழை பொழிந்து கொண்டிருப்பதாலும் அது தண்ணிதாக இருக்கின்றது. இப்புற்றிலுள்ள புற்றாஞ்சோற்றை உண்பதற்காகக் கரடி ஒன்று மான்கள் செல்லும் பாதையில், மின்னல் வெளிச்சத்தைத் துணையாகக் கொண்டு மெதுவாக வருகின்றது. வந்து புற்றின் மேற்புறத்தே சரிந்து உட்கார்ந்து கொண்டு புற்றாஞ்சோற்றை உண்பதற்காகக் கையைப் புற்றினுள்ளே நீட்டுகின்றது; துழாவுகின்றது. ஆனால் கரடி வருவதற்கு முன்னரே அப்புற்றுள் புகுந்து ஈயலை உண்ணச் சென்றிருந்த பாம்பு, கரடியின் தோலுறைக்குள் பொருந்தியதான கூரிய நகங்களுக்குட் சிக்குண்டு வலிமை தொலைந்து அழிகின்றது.

‘பெரிய பன்றியொன்று மலைவழியே வருகின்றது. அது ஆண்பன்றியாகும். அதனைப் பின் தொடர்ந்து வாயைப் பிளந்து கொண்டு ஆண்புலியொன்று வருகின்றது. அது தக்க இடத்தே பன்றியை அடித்துக் கொல்லுகின்றது. இரத்தம் கசிய இட மெல்லாம் இழுத்துச் செல்லுகின்றது. இச் செயலால் மணம் மிகுந்த பலாத் தோப்பும் புலால் நாற்றம் உடையதாகின்றது”

"மூங்கில் காடுகள் செறிந்த மலை அது. ஓரிடத்தே மூங்கிலுடன் புன்னை வாழை ஆகிய மரங்களும் செறிந்துள்ளன.