5. போர்க்களம்
பாஞ்சாலங் குறிச்சி மண்ணுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு என்பர். வேட்டைக்கு வந்த நாயொன்று ஒரு முயலை வெருட்டியதாம். வெருண்டோடிய முயல் இடத்திற்கு வந்து சேர்ந்ததாம்! ஓட்டத்தை விடுத்து உரமாக எதிர்க்கத் தொடங் கிய தாம்! வெருட்டி வந்த நாயே, வெருண்டோடுமாறு முயல் தாக்கியதாம். 'முயல், நாயை எதிர்த்ததற்குரிய காரணம், அம் மண்ணிற்கு இயற்கையாக அமைந்திருந்த வலிமையே' என்று கருதிக், கோட்டை கொத்தளங்கள் அமைத்தார்களாம். அதுவே பாஞ்சாலங் குறிச்சியாம். “வானம் பொழிகிறது; பூமி விளைகிறது; வந்தவனுக்கேன் வரிப்பணம்' என்று வினாவி ஆங்கிலேயரை அலறத் தாக்கிய அடலேறு கட்ட பொம்மன் இருந்தான் அல்லவா! அவன் ஊர்ச் சிறப்பு அது. கோழியூர்
செருக்கு மிக்க யானை ஒன்று செம்மாந்து நடந்தது. அதன் வருகை கண்டும், ஒருங்கற்றுக் கல கலக்கும் அதன் மணி ஒலி கேட்டும் மக்கள் ஓடி ஓடி மறைந்தனர். மதங் கொண்ட யானை அது. ஆனால் ஒரு கோழி அச்சம் சிறிதும் இன்றிப், பறந்து பாய்ந்து யானையின் மத்தகத்தின் மேல் ஏறி நின்று, அவ்யானை செயலற்றுப்போகும் அளவுக்குக் குத்திக் குடைந்தது; யானையால் ஒன்றும் செய்ய முடியவில்லை. கோழி தன்னால் இயலும் இடுக்கண் விளைத்து யானையின் நெற்றியில் நின்று வெற்றி முழக்கம் செய்தது. இதனை அறிந்தான் அந்நாட்டை ஆண்ட அருந்திறல் வேந்தன். 'இம்மண்ணின் சிறப்பே இந் நிகழ்ச்சிக்குக் காரணம் என்று கருதி அவ்விடத்தில் ஒரு நகரம் எழுப்பினான். அந் நன்னகரையே நாட்டுத் தலைநகரும் ஆக்கினார். அந்நகருக்கு என்ன பெயர் இட்டான்? கோழியின் செயற்கரும் செயலால் அல்லவா அந்நகர் எழுந்தது. ஆகவே அந்நிகழ்ச்சியின் நினைவாகக் 'கோழியூர்' என்று பெயரிட்டான். கோழியூரே சோழ நாட்டுத் தலைநகர் ஆயது. பின்னாளில் அஃது உறையூர் என்னும் பெயரும் பெற்றது. உறைவதற்கு ஏற்ற ஊர்தானே உறையூர்! இன்றும், திருச்சிக்கு அருகில் ‘உறையூர்’ உள்ளது!