428
―
இளங்குமரனார் தமிழ்வளம் 5
கோழியாம் உறையூரைத் தலைநகராகக் கொண்டு சோழ நாட்டைச் செவ்வையுற ஆண்ட வேந்தர்கள் பலர். அவர்களுள் கோப்பெருஞ் சோழனும் ஒருவன்.
உம் பெயர் என்ன?
அறிவுடை நம்பியின் அரசவைக்குச் சென்று, அறவுரை கூறிய ஆந்தையாரை அறிவோம் அல்லவா! அவ்வாந்தை யாரிடம் 'உம் பெயர் என்ன?” என்றால் ‘என்பெயர் கோப் பெருஞ்சோழன்' என்பாராம். கோப்பெருஞ் சோழனிடம் சென்று 'உன் பெயர் என்ன?' என்றால், 'என்பெயர் பிசிராந்தை யார் என்பானாம். இந்நிலையில் ‘இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்திய' உணர்ச்சி ஒத்த நண்பர்களாக இருந்தனர்.
அன்னத் தூது
ஓர் அன்னத்திடம் சொல்கிறார் ஆந்தையார்: “அன்னமே! ஆண் அன்னமே! நீ தெற்கே இருந்து வடக்கே செல்கிறாய்! செல்லும் வழியில் கோழியூர் உள்ளது. அதன் உயரிய மாடத்தில் உன் மனைவியுடன் தங்கி இளைப்பாறு! அனுமதி எதுவும் பெறாமலே சோழன் அரண்மனைக்குள் செல்! உன் மனைவி சுமக்கமுடியாத அளவு பொன் அணிகலங்களை நல்குவான்!" பிசிராந்தையார் இத்தகைய நட்பின் உறுதியாளராக இருக் கின்றார்! ஆனால், இதுவரை இருவரும் ஒருவரை ஒருவர் கண்ணால் கண்டது ல்லை! காதாரக் கேட்டது மட்டும் உண்டு!
பேறற்ற பேராளன்
கோப்பெருஞ் சோழன் மாபெரும் வீரன்! பகைவர் அவன் பெயர் கேட்டாலே அஞ்சி நடுங்குமாறு வாழ்ந்தான். அவனுக்கு மைந்தர் இருவர் இருந்தனர். ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்' என்று உணர்ந்து, 'தந்தை தாய்ப்பேணி' "இவரைப் பெற்ற வயிறுடையாள் என்ன நோன்பு நோற்றாளோ' என்று புகழுமாறு வாழ்ந்து நலம் பெருக்கும் மக்கள் எல்லாப் பெற் றோருக்குமா கிடைத்துவிடுகின்றனர்? கோப்பெருஞ் சோழன் எல்லா வகைகளிலும் நல்ல பேறு பெற்றவனாக இருந்தாலும், புதல்வர்களைப் பொறுத்த அளவில் அத்தகைய பேறு பெற் றான் அல்லன்!