புறநானூற்றுக் கதைகள்
53
மார்பைச் சுவைத்துப் பால் பெறாமையுடன் உணவும் இல்லாமல் அழ, அவ்வழுகையை நிறுத்துதற்குப் புலியைக் காட்டியும், நிலவைக் காட்டியும் முடியாமல் அப் பாவைப் போல் வலிச்சம் காட்டு என்றும் தணிக்க முடியாமல் துயரடையும் மனைவியும் மக்களும் துயர் நீங்குமாறு உடனே கொடை வழங்கி விடுத்தல் வேண்டும்” என்றார்.
தம் மக்கள் மனைவி நிலையை,
"இல் உணாத் துறத்தலின் இல்மறந்து உறையும் புல் உளைக் குடுமிப் புதல்வன் பன்மாண் பால் இல் வறுமுலை சுவைத்தனன் பெறாஅன் கூழும் சோறும் கடைஇ ஊழின்
உள்இல் வறுங்கலம் திறந்தழக் கண்டு
மறப்புலி உரைத்தும் மதியம் காட்டியும் நொந்தனள் ஆகி நுந்தையை உள்ளிப்
பொடிந்தநின் செவ்வி காட்டெனப் பலவும் வினவல் ஆனாள்”
என்பது எவரையும் உருக்கும் செய்தியாம்.
பெருஞ்சித்திரனார் பட்ட வறுமை தாயைக் கண்டு சேய் அரற்றி கண்டு சேய் அரற்றி உரைப்பது போல மேலும் தொடர்ந்தது:
"மழைவளம் போலவும் மழை நீங்கிய கோடையில் ஆற்று நீர் போலவும் நீ உள்ளாய்.
கொடுங் காட்டில் சென்றவர் ஓராண்டளவு கடந்தும் இன்னும் மீண்டிலர் என்று வருந்தி நிற்கும் என் மனைவி உன் கொடையால் வாய்த்த செல்வத்தைக் கண்டு வியப்புறும் வகையில் மணி மாறி, மாறி ஒலிக்க அணி நடையிடும் யானை மேல் ஏறிச் செல்ல விரும்பினேன்.
வெற்றி மிக்க வேந்தே, வறுமை பின்னே நின்று துரத்த உன்புகழ் அழைக்க வந்தயான் சில சொன்னேன். சொல்ல அறிவேன் எனினும், அறியேன் எனினும் அதனை அளவிட்டு அறியாமல் உன்னை அளவிட்டறிந்து வழங்குவாயாக.
வளமிக்க அரசர் நாணும்படி வளத்துடன் திரும்புவேன்!
நீ வளத்துடன் வாழ்வாயாக!” என்றார் (162).