புறநானூற்றுக் கதைகள்
73
என்று திட்டம் தீட்டிக் கொண்டிருந்தனர். இந்நிலையிலே சோழன் படைவீரர்களைப் பார்வையிட்டான். அது அவ் வீரர்களுக்குத் தேறுதலாக இருந்தது.
இதே நேரத்தே சேரன் படையிடையே ஒரு கூக்குரல் கேட்டது. ஒவ்வொருவரும் பாசறையை விட்டு வெளியே ஓடி வந்தனர். பதை பதைத்துப் போய் ஒருவரை ஒருவர் மோதிக் கொண்டனர். வெளிச்சம் இல்லாததால் பலர் கீழே வீழ்ந்து வீழ்ந்து எழுந்தனர். சோழர் பாசறைக்கும் இவ்வாரவார ஒலி கேட்டது. அவர்கள் திகைத்துப் போய்த் தங்கள் தங்கள் கருவிகளைத் தயாராக வைத்துக்கொண்டு நின்றனர். ‘ஓ வென்று அலறிக்கொண்டு செயலற்று இருந்தனர். ஏன்?
சேரனது யானை ஒன்று திடீரென்று மதங் கொண்டு விட்டது. அது கட்டுப்பாடு அற்றுக் கண்டவர்களையெல்லாம் காலால் மிதித்துக் கொல்லவும், துதிக்கையால் தூக்கி எறியவும்,. குடியிருப்பை மோதவும் ஆரம்பித்ததே காரணமாம். அதனை, அஞ்சாமல் அடுத்துச் சென்றான் கணைக்காலன்! அதன் துதிக் கையைப் பற்றிப் பிடித்து மத்தகத்தில் ஏறி இருந்துகொண்டு குத்துத் தடியால் அடக்கினான். அமைதி அடைந்தது யானை! விடியுமளவும் அமைதி கொண்டனர் வீரர்!
செங்கணானுக்குச் சேரனுடைய யானைப் பயிற்சி உள்ளவாறு விளங்கிற்று. ஆம்! யானைப் படை சிதைப்பதிலேதான் தன் வெற்றி உள்ளது எனக் கொண்டான். மற்றவர்களுக்குக் குதிரைப் போரையும், காலாட் போரையும் விட்டுவிட்டான்.
எழுந்தது கதிர்! புகுந்தது படை! புதிய உணர்ச்சி! புதிய வேகம்! கூற்றமும் அஞ்சும் கொடுமை! களக்காட்சி கண்ணால் காணமுடியாத அளவுக்குத் துயரத்தின் உறைவிடமாகி விட்டது.
எப்படித்தான் இருந்தது?
காலையிலே பட்டு வீழ்ந்தவர் இரத்தத்தை மிதித்து உழக்கியது களிறு! மாலையிலே கிளம்பியது புழுதி! என்ன புழுதி! பவழப் புழுதி!
இரத்தம் பெருக்கெடுத் தோடியது செங்குளத்திலிருந்து நீர் வடிவது போல! உடைந்த முரசமே மடை!
இரத்தமும் மூளைச் சேறும் வழுக்கி விடுகின்றது; விழு கின்றார்கள்; தட்டுத் தடுமாறி எழுகின்றார்கள்! தந்தங்கள் ஊன்று கம்புகளாகப் பயன்படுகின்றன.