96
―
இளங்குமரனார் தமிழ்வளம் 6
என்கிறார் திருவள்ளுவர், அது என்ன பொருள் என்றும் நன்கு கூறுகிறார்.
ஒரு பெற்றோர் தம் பிள்ளைகளுக்குப் பெருஞ் செல்வம் தேடி வைக்கின்றனர். அப்பொருளைக் காப்பதும் வளர்ப்பதும் அல்லது குறைப்பதும் அழிப்பதும் அப்பிள்ளைகளைப் பொறுத்ததே அல்லவா! தேடி வைத்து விட்டால் மட்டும் தீர்ந்ததா? அதனைப் போற்றிக் கொள்வது அவர்களைப் பொறுத்ததுதானே: கோடியைக் கொடுத்தாலும் கொள்ளை கொடுத்து விடுவார் உண்டு; கொள்ளை கொடுத்ததுபோல் செலவிடுவாரும் உண்டு!” 'நூறு’ கொடுத்தாலும் ‘ஆறு’ எனப் ‘பெருக்கிக்’ கொள்வாரும் உண்டு!
வினை
அதனால் தம் பொருள் என்ப தம் மக்கள் என்று சொல்லி யவர், “அவர் பொருள் தத்தம் வினையான் வரும்” என்றார். அவரவர் முயற்சியால் செயலால் என்பதே ‘வினையான்’ என்பதன் பொருள். அதனைத் 'தலைவிதி' என்று பொருள் காண்பது, தமிழர் தம் நிலை சாய்ந்து கெட்ட ‘தலைவிதி' தான். அறிவின்மை
வறுமை கொடுமையானது; அது எவர்க்கும் இருத்தல் ஆகாது; வறுமை ஒரு நாட்டில் இருக்குமானால் அதற்கு அடிப்படை அரசே; அத்தகைய தீய அரசை, மாற்றியமைத்தல் மக்கள் கடனே என்றெல்லாம் நினைத்துக் கூறியவர் வள்ளுவர். அவர், "நெருப்புக்குள் உறங்கினாலும் உறங்கலாம்; ஆனால், 'நிரப்பு' எனப்படும் வறுமைக்குள் கண்ணிமையை மூடுதலும் முடியாது” என்றும்,
“வறுமைக்கு ஒப்பான துன்பம் தருவது வேறு எது? அவ்வறுமையே” என்றும் கூறினார். அத்தகையவர், பெற்றோர் கடமையை எண்ணிப் பார்க்கிறார்.
ஒருவன் செல்வன் எனவும், ஒருவன் வறியன் எனவும் ஆவதற்கு அவன் மட்டுமே காரணமானவன் அல்லன். ஆட்சி யமைப்பும், சமுதாய அமைப்பும் காரணம் ஆதல் உண்டு. அதனால், செல்வம் வறுமை என்பவை மதிப்புக்கும், பழிப்புக்கும் உரியவை அல்ல, என்றும் மாறாதவையோ மாற்றியமைக்க முடியாதவையுமோ அல்ல. ஆனால், அறிவு என்பது அத்தகையது அன்றே. அவனவன் முயற்சியால் அல்லவோ உண்டாவது.