―
திருக்குறள் ஆராய்ச்சி 1
127
என்பவர்தாம் அப்பணியில் ஈடுபடலாம். இயல்பாக அசைவும், ஆட்டமும் உடையார், இவ்வாறு எண்ணி அவரொடு சேர்ந்தால் கட்டாயம் அவர்க்குக் கூட்டாளியாகி விடுவார். தலைவரும் கூட ஆகிவிடுவார். அதனால்.
“நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க் கினத்தியல்பது ஆகும் அறிவு"
என்றார் வள்ளுவர் (452).
நீர்க்கு நிறம் இல்லை. மண்ணில் விழுந்த நீர்க்கு நிறம் உண்டாக்கி விடுகின்றது. எதனால்? அது விழுந்த நிலத்துக்கு உள்ள நிறத்தால்!
நீர்க்குச் சுவை இல்லை. ஆனால் அது விழுந்த நிலத்தில் படிந்துள்ள சுவையைத் தன் சுவையாகக் கொண்டு விடுகின்றது! நீர் விண்ணில் இருந்து விழும்போது அழுக்கு அதற்கு இல்லை. ஆனால் மண்ணில் விழுந்தபின் அம்மண்ணில் உள்ள அழுக்கெல்லாம் நீருக்கும் உண்டாகி விடுகின்றது. இன்னான்
சேர்ந்த இனத்தின் இயல்புக்குத் தக ஒருவர் உள்ளம் அமையும் என்பதை அறிய வேண்டுமா? ஒருவன் தனிப்பட்ட பழக்கத்தில் எப்படி இருக்கிறான் என்பதை அவன் அறியாமல் கண்காணிக்க வேண்டும். அவனே கூட்டத்தில் சேரும்போது எப்படி இருக்கிறான் என்பதையும் அவன் அறியாமல் கண் காணிக்க வேண்டும். அப்பொழுது உண்மை புலப்படும்.
மிக நல்லவனாகத் தனி நிலையில் இருப்பான் கூட ஒரு தீய கூட்டத்தில் இருக்கும் போது, அக்கூட்டத்தின் இயல்புக்கு ஏற்ப எப்படி மாறிப் போகிறான் என்பது வியப்பாக இருக்கும். அப்படியே மிகக் கெட்டவனாகத் தனி நிலையில் இருப்பான் கூட நல்லோர் கூட்டத்தில் இருக்கும் போது எத்தகு நல்லவனாக இருக்கிறான் என்பதை அறிய அதனினும் வியப்பாக இருக்கும்.
அதனால்.
“மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம் இன்னான் எனப்படும் சொல்”
என்றார் வள்ளுவர்.