உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

L

காலமெல்லாம்-

திருக்குறள் ஆராய்ச்சி 1

11

மாந்தரை மாந்தராக்கும் பொருள், அவரைத் தெய்வமாக்கும் பொருள், அவரை எந்நிலையிலும் கைவிடாத பொருள், எத்தகு துன்பமும் ஊட்டாத பொருள், என்றும் பாதுகாப்பாக உட னிருக்கும் பொருள், உடையானை அன்றி உலகையும் உய்யச் செய்யும் பொருள் கல்வி என்னும் சுவைக்கனியே ஆகும். அக்கனி இன்ன பருவம் என்று இல்லாமல் எல்லாப் பருவங்களிலும் கருதிய அளவில் கையில் எளிமையாகக் கிடைப்பதற்கு வாய்ப்பு இருந்தும் அதனைக் கண்டு கொண்டு நலம் பெறாமல் கருங் காய்களைத் தேடித் தேடித் திரி கின்றீர்களே; இஃது அறிவுடைமைதானா (100), எனக் கூவிக் கூவிக் கூறுகிறார். உலகெல்லாம் கற்றுணர வேண்டும் என்னும் ‘கல்விக் காதல்' அவர்க்கு அத்தகைத்து!

வளர் கல்வி

நான்கு சுவர்க்குள் வருவது மட்டும் கல்வியன்று; நூலள வுடன் நிற்பதும் கல்வி அன்று; அவற்றினும் மிக்க விரிவுடையது கல்வி. பெற்றோர் தந்த பிறவிக் கொடையாலும், ஆசிரியர் தந்த அருங்கொடையாலும், நூல் தந்த நுண்கொடையாலும், உடன் பயில்வோர் தந்த உயர்க் கொடையாலும், பெருமக்கள் தந்த பெருங்கொடையாலும், புலங்கள் வழியாகக் கண்டும் கேட்டும் சுவைத்தும் முகர்ந்தும் தொட்டும் அறியும் புகழ்க் கொடையாலும், எண்ணியும் நினைந்தும் எழுதியும் பேசியும் வரும் எழிற்கொடையாலும், செய்தும் வனைந்தும், புனைந்தும் வரும் செழுங்கொடையாலும் காலமெல்லாம் பெருகி வருவது கல்வி. அறிய அறிய அறியாதவை இவை என்பதை அறியச் செய்வது கல்வி (1110). இத்தகு வளமிக்க கல்வி ஓரிடத்தின் அளவிலோ, ஒரு காலத்தின் அளவிலோ அடங்கி விட்டதாகுமோ? கேள்வி

இனிக் கற்கும் பருவம் இருந்தும், கற்கத்தக்க வாய்ப்பும் துணையும் இல்லாதவர் இலரா? பெற்றோர் இன்மை, வழி காட்டல் இன்மை, பொருள் இன்மை இன்னவற்றால் கற்க முடியாதவரும் உள்ளனர் அல்லரோ! இத்தகையர் கல்விக் கண் பெறுவதற்கு வழி என்ன? கல்லாவிலங்காகவே அவர்கள் காலமெல்லாம் இருந்துவிடத்தான் வேண்டுமா? தக்க ஆசிரியரை அடுத்துக் கற்க வாய்ப்பவர் எனினும் அவ்வாசிரியர் கற்பித்த அளவிலும், அங்குக் கற்பிக்கப்பட்ட நூல் அளவிலும் கல்வி முற்றுப் பெற்று விட்டதாகுமா? காலமெல்லாம் கற்க வேண்டும்