1. மனக்கவலை மாற்றும் மருந்து
கோவில் மணி “டாண் L டாண் என்று ஒலித்துக் கொண்டு இருந்தது. "முருகா முருகா” என்று என்று சொல்லிக் காண்டே திருப்பரங்குன்றத்து மக்கள் திரள் திரளாகக் கோவிலுக்குள் போய்க்கொண்டிருந்தனர். தேங்காய், பழம், பூ, சூடன், குங்குமம், திருநீறு ஆகியவை நிரம்பிய தட்டு கைகளிலே விளங்க. "முருகா முருகா என்று வாய் முழங்க அமைந்த நடையுடன் முருகன் திருமுன்பு அடைந்தனர். அவர்களுடன் தேங்காய்க்கடைக் குமரவேலும் இருந்தார்.
எவர் வராவிட்டாலும் சரி, குமரவேல் மாலைக் கால வழிபாட்டுக்கு வரத் தவறுவதே இல்லை கோவிலுக்குள் புகுந்துவிட்டால் சிலை சிலையாக உற்றுப் பார்த்துக்கொண்டு சிற்பக் கலைஞராகி விடுவார். நுழைவாயிலில் பொறித்திருக்கும் திருஞானசம்பந்தர் திருப்பரங்குன்றத் தேவாரத்தைப் பன்முறை உணர்ச்சியோடு பாடிப்பாடி கவிஞராகி விடுவார். அவர் பாடுவதை அருகில் நின்றுகேட்கும் வாய்ப்பு ஒருவருக்குக் கிடைத்துவிட்டால் உளங்கனிந்து இறையன்பராகி விடுவார்
என்பதற்கு ஐயமில்லை.
குமரவேல் முருகன் திருமுன்பு நின்று அவன் தெய்வத் திருக்கோலத்தில் உள்ளம் பறி கொடுப்பார். ஊன் கலந்து, உயிர் கலந்து, உணர்வுகலந்து கற்சிலையாய் நிற்பார். பக்கத்தே எவர் இருக்கிறார், என்ன செய்கிறார் என்பதை அறியாது பாடிக் கொண்டே இருப்பார். அதிலும்,
“பன்னிய பாடல் ஆடலன் பரங்குன்றை
உன்னிய சிந்தை உடையவர்க் கில்லை உறுநோயே"
என்னும் ஞானசம்பந்தர் வரிகளை மாறி மாறி நூறு முறைகளாவது சொல்லாமல் ஓயமாட்டார். பாடும்போதே கண்ணீர்த் துளிகள் கன்னத்தை நனைத்துத் தரையையும் மெழுகிவிடும்.