உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. பூனையும் புலியும்

“மண்ணுலகில் வாழவேண்டிய முறைப்படி வாழ்ந்தவர்கள் விண்ணுலக இன்பத்தை அடைவார்கள். அவர்கள் தேவராகத் திகழ்வர்" என்று நூல்கள் குறிப்பிடுகின்றன. இத்தேவர்களின் கண்கள் இமையாடுவது இல்லையாம். அதனால்தான் இமையவர் என்று பெயர் பெற்றார்களாம். இச்செய்தியை நூல்களில் கண்ட ஒருவர் நல்ல கற்பனை ஒன்றைப் படைத்துள்ளார்.

தாமே ஒரு கற்பனைக் கேள்வியை உண்டாக்கிக் கொண்டு, தாமே விடையும் படைத்தார்.

தேவர்கள் ஏன் கண் இமைத்தல் இல்லை?

நேருக்கு நேராக நின்று புகழ்ந்து பேசும் சிலர், தம்மால் புகழப்பட்டோர் சிறிது அகன்றதும் பழிக்கிறார்கள். இத்தகை யர்களுக்கு அஞ்சித்தான் தேவர்கள் கண்ணிமையாது ஒரே விழியாய் விழித்துக் கொண்டு இருக்கின்றனர். இமை மூடித் திறக்குமுன் புறஞ்சொல்லி விடுவார்களாம்; அதற்காகவே!

கற்பனை எப்படி நயமிக்கதாயுளது!

புறஞ்சொல்லுபவர்களுக்கு இக்கற்பனை போன்ற சுடுசரம் - தீயம்பு உண்டா?

-

இல்லத்தின் உள்ளே இருந்து, இன்முகம் கொண்டு நன்னீர் அருந்தி நறுஞ்சுவை உணவு உண்டு மகிழ்ந்த ஒருவன், வீட்டிற்கு வெளியே வந்து அவ்வீட்டுக்கே கொள்ளிவைக்கிறான்- இத்தகைய செயலே முன்னால் புகழ்ந்து பின்னால் பழிப்பது!

ஊக்கம் உடைய ஆணோ, உள்ளம் உடைய பெண்ணோ புறஞ் சொல்லலாமா? "நேரில் சொல்ல முடியாத கோழை; "நெஞ்சு விட்டுரைக்க முடியாத வஞ்சகர்” என்பதே பொருள்.

"வீரமிருந்தால் நேருக்கு நேர் நில்" என்பது போன்று வீரம் இருந்தால், உண்மை இருந்தால் நேருக்கு நேர் சொல்; அதுவே ஆண்மை!