உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

இளங்குமரனார் தமிழ்வளம் - 9

காற்றிலே தூற்றும்பொழுது நெற்பதர் நெடுந்தொலை சென்று வீழும்!

சான்றோர்கள் அவையின் இடையே மனிதப் பதரும் தொலைதூரத்தில் புறக்கணித்து ஒதுக்கப்படுவான்.

நென்மணி கோட்டைக்குள் போட்டுப் பாதுகாக்கப்பெற, பதர் குப்பைக் குழிக்குப் போகும்!

பயன் மொழியாளர் இறவாத நூல்களில் இடம் பெற்று ஓங்க, பதர்களோ புல்லியர் நாவளவில் நின்று நாற்ற மெடுப்பர்.

நெற்பதர் பிறவிப் பயனை இழக்கும்!

மனிதப் பதரும் அப்படியே!

நெற்பதருக்கு இணையான மனிதப்பதரை மனிதன் என்பது தகுமா? தகாது; அவன் மனிதன் அல்லன்; மனிதப்போலி; மனிதப் பதர்!

மனிதப் பதரைப்பெற்ற எந்தத் தாயும் மன மகிழ்வாளா? ஈன்ற தாயானும் வெறுக்கப்படும் மனிதப் பதரின் நிலைமை இரங்கத்தக்கதுதான்.

பதர் இருக்கட்டும்; ஒருவன் எப்படிப் பதர் ஆகின்றான்?

எந்த வேளையும் இல்லாமல் சுற்றித் திரிவதே திருப் பணியாகக்கொண்டு அலைபவன் பதர் ஆகின்றான் பயன் படாத-பயன்படுத்தப்படாத-இரும்பு துருவேறிக் கெடுவது

இல்லையா?

'சோம்பலே சுகம்' எனக் கொண்டு இருந்த இடத்தை விட்டு எழும்புவதும் ஒரு பெரிய மலையைப் புரட்டுவதாகக் கருதுபவன் பதர் ஆகின்றான்.

தன்மானம் இல்லாமல் பிறரைக் காரணமின்றிப் புகழ்ந்து பேசிப் பிழைக்க முனைபவன் பதர் ஆகின்றான்.

நூலறிவோ நுண்ணறிவோ இல்லாமல் தன்னறிவைத் தவறாக எடைபோட்டுச் சொல்வோர் உரையைக் காதில் போட்டுக் கொண்டு புலம்பித் திரிபவன் பதர் ஆகின்றான்.

செல்வ வளர்ப்பாலும், கவலையற்ற வாழ்வாலும் பயனற்றவை சொல்லி, பயனற்றவை செய்து பதர் ஆகின்றான்.