உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கட்டுரைகள்

99

வளர்ந்துவிட்ட இருபதாம் நூற்றாண்டு விஞ்ஞான மருத்துவ இயலும் தோல் நோய்க்கு மருந்தாகச் சுடச் சொல்கின்றது. ஆனால், தீயால் இல்லை; சூட்டுக் கோலால் இல்லை; மின்சாரத் தீயால்; விஞ்ஞானக் கருவிகளால்! தீ - தீதானே! சுடுவதுதானே - சூடு ஏற்றி நோய் தணிப்பதுதானே முறை!

தீ இந்நாளில் என்ன என்னவெல்லாம் செய்கின்றது? புகை வண்டியைச் செலுத்துகின்றது; உந்து வண்டியை இயக்குகின்றது; விமானத்தைப் பறக்க வைக்கின்றது. இன்னும் பலப்பலசெய்கின்றது. தீயில்லையேல் ஒளி இல்லை; சுவை இல்லை; ஆற்றலும் இல்லை என்று ஆகிவிட்டது.

"தீயால் கெடுதல் ஏற்படுவது இல்லையா? எத்தனை எத்தனை ஆலைகளை வீடுகளை உண்டு ஏப்பமிடுகின்றது தீ! த்தனை மக்களை, உயிர் வகைகளை, பொருள்களைச் சுட் டெரித்துச் சாம்பல் ஆக்குகின்றது தீ! தீயைப் போலும் கொடுமை செய்யும் ஒன்று உண்டா? தீயின் கொடுமையை அறிந்துதானே, அத்தன்மையை உடையவனைத் ‘தீயன்' என்றும், அவன் செய்யும் தீச்செயலைத் ‘தீமை' என்றும் பெயரிட்டனர்.” என்னும் எண்ணங்கள் கிளைக்கலாம். அவ்வாறு கிளைப்பது நல்லதே - தெளிவு பிறக்கும் ஆதலால்.

தீ வழியாகத் தீமை உண்டாவது உண்மை தான். எப் பொழுது தீமை உண்டாகிறது? அதன் மீது மனிதன் தன் குணத்தை ஏற்றிவிட்டுச் செலுத்தும்பொழுது தீமை செய்கிறது.புகைவண்டி இயக்கியாக வைத்து மனிதன் செலுத்தும் பொழுது அது நன்மை செய்கின்றது. அதனைத் துப்பாக்கி முனையில் வைத்து, மனிதன் தன் கைமுத்திரையை வைத்து அனுப்பும் பொழுது கொலைத் தீமை புரிகின்றது. இது தீயின் முத்திரையா? தீயவனின் தீமை முத்திரையா?

வழிகாட்டும் ஒளி விளக்காகப் பயன்படுத்துகிறான் ஒருவன்; அதே தீயை அடுத்த வீட்டைக் கொழுத்தப் பயன் படுத்துகிறான். தீ கக்கும் மருந்தால் தீராப் பிணியைப் போக்க முனைகிறான் மருத்துவன்; தீ கக்கும் வெடி மருந்து கண்டு துடிதுடிக்க வைக்கிறான் மரத்துப் போன அறிவாளி ஒருவன். இவை தீயின் குற்றமா? தீமையின் பழியா?

தானாகத் தீப்பிடித்து அழிப்பது இல்லையா? உண்டு; நீரால் அழிவு இல்லையா? நிலத்தால் அழிவு இல்லையா? காற்றால் அழிவு இல்லையா? எல்லாவற்றாலும் அழிவு உண்டு!