22. எது ஈகை?
ஒருவன் ஒரு பொருளைப் பிறருக்குக் கொடுத்துத் திரும்பப் பெறுகிறான்; இதற்குக் 'கைமாற்று' என்று பெயர்.
ஒரு பண்டத்தைக் கொடுத்து வேறொரு பண்டத்தைப் பதிலுக்குப் பெறுகிறான்; இது பண்டமாற்று ஆகிறது,
பணத்தால் ஒரு பொருளை வாங்குகிறான்; பணத்திற்கு ஒரு பொருளை விற்கிறான் - இது வணிகம் ஆகிறது. இம்மூன்று வழிகளும் வாணிகத்துள் அடக்கிவைக்கத் தக்கவையேயாம்! உடனடியாக ஏற்படும் பொருளாதார நன்மை கருதியோ, அல்லது பின் விளையும் பொருளாதார வாய்ப்புக் கருதியோ கொடுத்து வாங்கப்படுபவை இவை!
இவை அல்லாமல், ஒருவர் தம் பொருளைப் பிறருக்குத் தருங்கால் நிலத்தின் மேலோ வீட்டின் மேலோ வேறு ஒப் பந்தத்தின் மேலோ “இன்ன காலத்திற்கு இவ்வளவு தொகைக்கு இவ்வளவு வட்டியுடன்" என்று பேசி எழுத்துச் சான்றுடன் காடுப்பது உண்டு. இது வட்டிக் கடன் முறை. திருமணம் காதணி விழா, பூப்பு நீராட்டு, புதுமனை புகுவிழா, இறுதிக்கடன் இவற்றுக்கு உற்றார் உறவினர்களோ, அன்பர்களோ நண்பர்களோ பொருளோ பணமோ தருவது உண்டு. இது வட்டியில்லாக் கடன்முறை இது கைமாற்றுப் போன்றதும் இல்லை; மற்ற முறைகள் போன்றதும் இல்லை. அதே பொருள் மீண்டும் பெறப்படுவது உண்மைதான். அது திரும்பி வராவிடில் தெருவில் திட்டும் வசையுமாகத் திருக் கூத்து நடத்துவதும் மெய்மைதான்! ஆனால் அது எப்பொழுது திரும்ப எதிர்பார்க்கப் படுகிறது? ஏதேனும் ஒரு விழா நடக்கும் பொழுதுதான்! இம்முறை 'செய்முறை" என்றும் வழங்கப்பெறும். இன்னொன்று, அன்பளிப்பு! இதே அன்பளிப்பும் இக்காலத்துத் திரும்ப எதிர் நோக்குவதாகவும், திருப்பி வராவிடில் பழிப்புக்கு உரியதாகவும் போய்விட்டது. சாதாரணமாக, விருந்தோம்பலிலே இதனைப் பார்க்கலாமே! “பத்துவகைக் கறியுடன், பாயசம் வடையுடன் விருந்து செய்து அனுப்பினேன். அவன் வீட்டுக்குப் போன என்னை வெற்றிலைபோடு என்றாவது சொன்னானா?” என்று