திருக்குறள் கட்டுரைகள்
151
துன்புறுத்துதலால் ஒருநாளும் துன்பத்தை ஒழிக்க முடியாது. பழிக்குப் பழி செய்தலால் ஒருநாளும் பழியை ஒழிக்க இயலாது. அடித்தால் எழும்பும் பந்தை அடிக்காமல் விட்டால் அன்றி அமைந்துவிடக் காணமுடியுமோ? எரியும் நெருப்பில் நீர்விடின் தணியும் - அணையும்? நெய்யை விடின் மேலும் எழும்! சினத்தைச் சினத்தாலும், பகையைப் பகையாலும், வெறுப்பை வெறுப்பாலும், அழிவை அழிவாலும் தீர்த்து விடுவோம் என முனைபவர்கள் வெற்றி காணப் போவது இல்லை. பொறுத்தல் ஒன்றாலேயே, இன்னா செய்தார்க்கும் இனியது செய்யும் ஒன்றாலேயே, வெறுத்து ஒதுங்குபவர்க்கும் விருப்புச் செய்யும் ஒன்றாலேயே வழிப்படுத்த முடியும்.
இத்தகையன செய்ய அனைவராலும் இயலுமோ? அனைவராலும் எளிதாகச் செய்ய இயலுமாயின் விரல் விட்டு எண்ணத்தக்க உயர்பெருஞ் சான்றோர்கள் தாமா உலகந் தோன்றிய காலமும் இன்றுவரை இருந்திருப்பர்? இஃதொன்றே இக்கோட்பாட்டின் அருமையைப் புலப்படுத்தத்தக்க சான்றாதல்
உறுதி.
முனைப்பும் பற்றும் அறுவதுதான் துறவு-தவம்! இவை அற்றவன் இல்லத்தில் நின்றாலும் துறவிதான்! இவை உள்ளவன் துறவறத்தில் நின்றாலும் துறவியாகான்! உடையும் சடையுமோ துறவு? உள்ளத் துறவே துறவு! ஏனைப் புறத் துறவுக் கோலம் உள்ளத் துறவு இல்லையாயின்—வெறும் வேடமே!
முனைப்பும் பற்றும் அடங்கிய துறவிக்கு அருளாளிக்கு— ஒருவன் நேரிடையாகத் துன்பஞ் செய்தாலும் என்ன உணர்வு ஏற்படும்? ஏற்பட வேண்டும்? இவன் அறியாது துன்பஞ்செய்கிறானே! இதன் பயனை அடைய வேண்டி நேரிடுமே என்று இரக்கம் செலுத்தும் உணர்வு எழவேண்டும். அதுவே முதற்படி. அவன் செய்த துன்பத்தைப் பொருட்டாகக் கொள்ளாமல் பொறுத்துக் கொள்ளுதல் இரண்டாம் படி! பொறுத்துக் கொள்வதுடன் கேடு செய்தான் என்னும் எண்ணம் தனக்கு எப்பொழுதேனும் ஏற்படாவண்ணம் மறந்து விடுவது மூன்றாம் படி! தனக்குக் கேடு செய்தவனுக்குத் தன்னாலோ—அன்றிப் பிறராலோ எத்தகைய கேடும் நிகழ்ந்துவிடா வண்ணம் காத்து நிற்பது நான்காம் படி! அவனுக்கு நன்மை செய்வது ஐந்தாம் படி! நன்மை செய்தது கருதி மகிழாவண்ணம்-தன் கடமை அது எனக் கருதி