உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

31. ஒன்றே ஒன்று

நூல் - நூற்பது நூல் ஆகிறது! கைவல்ல ஒருவன் தூய பஞ்சு கொண்டு நூற்று நூலாக்குகிறான்! நூல் - ஆடையாகிறது. மானங்காக்கிற மதிப்பும் தருகிறது. "மேலாடை இன்றிச் சபைபுகுந்தால் இந்த மேதினியோர், நூலாயிரம் படித்தாலும் பெரிதென்று எண்ணார்" என ஒரு புலவர் பாடுகின்றார் அல்லவா! மனிதனுக்கு அடையாளமாக, நாகரிக முதிர்வுக்குச் சான்றாக இலங்குவது ஆடை!

சொல்லைப் பஞ்சாகக் கொண்டு, நூற் நூற்கும் நுண்ணியர்களும் உளர். அவர்களுக்குப் பாக்களும், உரைநடையும் இழை நூல்கள் ஆகின்றன. இதுவும் நூல்தான்! முன்னது ஆடைநூல்; பின்னது அறிவுநூல்! முன்னையது எத்தகைய வேலைப்பாடும். விலையும் உடையது ஆயினும் திரிதிரியாகும்; நைந்துபோம்; கிழியும்! பின்னையது வளரும்; மேலும் மேலும் விளக்கம் பெறும்! வாழும்; விரியும்! “நூற்றுப்பத்தாயிரம் பொன்பெறினும் நூற் சேலை நாற்றிங்கள் தன்னில் கிழிந்துபோம்” என்று நூற்சேலை இயல்பை நுவன்ற ஔவையார், “என்றுங் கிழியாது என்பாட்டு” என்று ஒள்ளிய முடிவுரை வழங்கினார் பாட்டியலுக்கு! ஆடையை, “அடுத்தடுத்து நாமதனைத் தப்பினால் நம்மையது தப்பும்” என்று விளையாடிப் பாடிய 'இரட்டையர்' ஆடை தப்பியது; பாடல் தப்பியதோ?

66

ஆடை நூலிலும் தரம் உண்டு; அறிவு நூலுக்கும் தரம் உண்டு! தரங்கண்டறிவதும் தரம் உடையார்க்கே இயலும். "புலமிக்கவரைப் புலமை தெரிதல் புலமிக்கவர்க்கே புலனாம்" என்றார் புலமையுணர்ந்த சான்றோர் ஒருவர்.

"பாலெல்லாம் நல்ல பாலாமா? நூலெல்லாம் வள்ளுவர் நூலாமா?” என்று வினவினார் பழம்புலவர் ஒருவர். “கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாமா? சொல்லெல்லாம் வள்ளுவர் சொல்லாமா?" என்று கேட்கிறார் புதுப் புலவர் ஒருவர். நூல்கள் அனைத்தும் உயரிய நூல்கள் ஆவது இல்லை! நூற் பெயர்க்குத் தகுதி இல்லாத சிலவும் நூல் ஆதலுண்டு, அவையெல்லாம் காலமென்னும்